வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நீடிப்பு ரத்தானது டெண்டர் முறைகேடு வழக்கு| Dinamalar

வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நீடிப்பு ரத்தானது 'டெண்டர்' முறைகேடு வழக்கு

Added : நவ 30, 2022 | |
சென்னை:சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கான 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடுகள் செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதேநேரத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில்,

சென்னை:சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கான 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடுகள் செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதேநேரத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்து விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்த, 2019 ஜனவரியில், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு அனுமதி வழங்கியது. டி.எஸ்.பி., சங்கரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

பின், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ்., அதிகாரி பொன்னியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி, அறிக்கை அளித்தார். அறிக்கையை, அ.தி.மு.க., அரசு ஏற்று, நடவடிக்கையை கைவிட்டது.


அனுமதி


ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, ஐ.பி.எஸ்., அதிகாரி கங்காதர், புதிதாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அறிக்கை அளித்தார்.

அரசுக்கு அறிக்கை வந்த மறுநாளே, 2021 ஆகஸ்டில், வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, அரசு அனுமதி வழங்கியது. அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாகவும், வேலுமணி மற்றும் 12 பேருக்கு எதிராக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார், 2022 மார்ச்சில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.

வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராஜு, சித்தார்த்தவே, வழக்கறிஞர்கள் ஜெ.கருப்பையா, வி.இளங்கோவன்; அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கறிஞர் வி.சுரேஷ், ஆர்.எஸ்.பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகினர்.


அறிக்கை


இவ்வழக்கில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:

அறப்போர் இயக்கம் மற்றும் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில், ஒப்பந்தங்களை மாநகராட்சிகளின் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் தலைமை பொறியாளர்கள் வழங்கியதாக தெரிவித்து உள்ளனர்.

ஒப்பந்தங்கள் வழங்கியதில், வேலுமணி தான் அதிகாரம் படைத்தவர் என தெரிவிக்கவில்லை.

வேலுமணியின் பினாமிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன என்றும், அதில் ஒருவர் வேலுமணியின் சகோதரர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தேவை.

ஆட்சிக்கு வரும் கட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, தங்கள் அரசியல் எதிரிகளை வேட்டையாடும் போக்கை அனுமதிக்க முடியாது.

அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் அசைவுக்கு ஏற்ப, போலீசாரும் ஆடுகின்றனர். வேலுமணியை விடுவித்து அதிகாரி பொன்னியும், அவரை தொடர்புபடுத்தி அதிகாரி கங்காதரும், அறிக்கை அளித்துள்ளனர்.

ஒப்பந்ததாரர்களுக்கும், வேலுமணிக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடிக்க, கங்காதர் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருந்தால், வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததில் நியாயம் இருந்திருக்கும்.

முதல் தகவல் அறிக்கையில், வேலுமணி மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.


முகாந்திரம் இல்லை


டெண்டரை பரிசீலித்து வழங்கிய, மாநகராட்சி அதிகாரிகளை குறிப்பிடவில்லை. அதில் இருந்து, ஆரம்பகட்ட விசாரணையில் கூட, ஒப்பந்தங்கள் வழங்கியதில் தொடர்புடைய அதிகாரிகளை, அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதல் தகவல் அறிக்கையில், வேலுமணி தான் ஒப்பந்தங்களை பரிசீலித்து வழங்கினார் என்று குறிப்பிடப்படவில்லை.

முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில், விசாரணைக்கு முகாந்திரம் இல்லை என நாங்கள் கூறவில்லை; வேலுமணியை வழக்கில் தொடர்புபடுத்த, ஆரம்ப முகாந்திரம் இல்லை.

முதல் தகவல் அறிக்கையை முழுமையாக, நாங்கள் ரத்து செய்யவில்லை. குற்றம் நடந்திருப்பதை, முதல் தகவல் அறிக்கை வெளிப்படுத்துகிறது; ஆனால், வேலுமணியை வழக்கில் தொடர்புபடுத்த, போதிய ஆதாரம் இல்லை.

எனவே, அவருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில், புலனாய்வு அதிகாரி, விசாரணையை தொடர்ந்து நடத்தி கொள்ளலாம்.

வேலுமணியை தொடர்புபடுத்த புதிதாக ஆதாரங்களை, அவர் சேகரித்தால், இறுதி அறிக்கையில் அவரை சேர்த்துக் கொள்ளலாம்.

கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டில் நடந்த தேர்தல்களின்போது, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில், 58.23 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் என, புலனாய்வு அதிகாரி மதிப்பிட்டுள்ளார்.

வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த மனுக்கள் சரியானது தானா என்பதை, இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது.

அதில், குறைபாடு ஏதும் இருந்தால், புலனாய்வு அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வரலாம்.

எனவே, கோவை லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த இந்த வழக்கில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X