சென்னை:''எம்.ஜி.ஆர்., படம் வெளியானதும், எனக்குதான் முதலில் போன் செய்து, படம் எப்படி இருக்கிறது என விசாரிப்பார்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில், ஜானகி நுாற்றாண்டு துவக்க விழா, அவரது நுாற்றாண்டு சிறப்பு மலர் வெளியீடு, திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, எம்.ஜி.ஆர்., நுால் வெளியீட்டு விழா ஆகியவை, நேற்று நடந்தன.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி. அவரது நுாற்றாண்டு விழாவில் பங்கேற்பது பெருமை. இது சிலருக்கு வியப்பாக, அதிர்ச்சியாக இருக்கும்.
வரலாற்று உண்மையை மனசாட்சிப்படி சிந்திப்பவர்களுக்கு, இது வியப்பாக இருக்காது.
எம்.ஜி.ஆர்., 20 ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்தார். காலத்தின் சூழல் காரணமாக, தனி இயக்கம் கண்டார்.
அந்த இயக்கத்தை பொறுத்தவரை, அவரது பங்களிப்பு 15 ஆண்டுகள் தான். இது தெரிந்தவர்களுக்கு, நான் இவ்விழாவில் பங்கேற்பது வியப்பாக இருக்காது.
இந்த கல்லுாரி உருவாக, அனுமதி வழங்கியது கருணாநிதி. எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
பள்ளியில் படித்தபோது, ஆண்டு விழா நடத்த நன்கொடை வசூலிப்பேன்.
நான் முதலில் நன்கொடை சீட்டை எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டூடியோ வருவேன். எம்.ஜி.ஆர்., 250 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொள்வார்.
என் மீது, அளவு கடந்த பாசம் கொண்டவர். அவர் படம் வெளியானதும், முதல் ஆளாக, முதல் டிக்கெட் வாங்குவேன். படம் வெளியானதும், முதலில் கோபாலபுரத்துக்கு போன் செய்து என்னிடம், 'படம் எப்படி இருந்தது?' எனக் கேட்பார்.
'காதல் சீனில் சூப்பராக நடித்தீர்கள்' என்பேன்; அதை ஏற்றுக் கொள்வார். இதை என் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் முத்துசாமி, பொன்முடி, ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சக்கரபாணி பங்கேற்றனர்.