'நாட்டின் பாதுகாப்புக்கு ஒவ்வொரு மாநிலமும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குஜராத் தேர்தலில் பா.ஜ., அறிவித்துள்ளது போல், பயங்கரவாதமயமாக்கல் தடுப்புப் பிரிவை உருவாக்குவது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசிக்க வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
குஜராத் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், சிறந்த நிர்வாகம் ஆகியவை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
மக்களின் இந்த ஆதரவுடன் தான், ௨௭ ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி அங்கு அமைந்துள்ளது.
வரும் தேர்தலிலும் பா.ஜ., மிகப் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். கட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட எந்தக் கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்தக் கட்சியை ஏற்பது குறித்து மக்களே முடிவு செய்வர். மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி இல்லை. இந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியாது.
குஜராத்தை பொருத்தவரை, காங்கிரஸ் தான் தற்போதும் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், அக்கட்சி தற்போது பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அது, குஜராத்திலும் வெளிப்படையாக தெரிகிறது.
அரசியலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்; தொடர்ந்து தீவிரமாக செயல்பட வேண்டும். அது போன்ற ஒரு முயற்சியில் தான், காங்கிரசின் ராகுல் பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். ஆனால், அதற்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.மாநில தேர்தலில் தேசிய பிரச்னைகளை முன்வைப்பதாக எங்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
குஜராத் பாதுகாப்பாக இல்லாமல் நாடு பாதுகாப்பாக இருக்க முடியுமா? எல்லை மாநிலமாக உள்ளதால், குஜராத்தில் பாதுகாப்பு தொடர்பாக பேசுவதை தவிர்க்க முடியாது.
இந்த வகையில், பயங்கரவாதமயமாக்கும் முயற்சிகளை முறியடிக்க சிறப்புப் பிரிவு உருவாக்குவோம் என, குஜராத்தில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம்.
இது மிகச் சிறந்த முயற்சி. இதை தேசிய அளவிலும், அனைத்து மாநில அளவிலும் உருவாக்க வேண்டியது அவசியம். இது குறித்து மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும்.
நம் இளைஞர்களை, மதத்தின் பெயரால் பயங்கரவாதத்துக்கு துாண்டிவிடுவதை ஏற்க மாட்டோம். இதன்படி தான், பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பிராந்திய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கப் போவதாக கூறுகின்றன. அக்கட்சிகளுக்குள் அரசியல் போட்டி உள்ள நிலையில், இது போன்ற கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை.பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ., தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில், வரும் லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.தெலுங்கானாவிலும் பா.ஜ., பிரபலமடைந்து வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் தற்போது சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் கூறியதாவது:தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஹிந்தி அல்லது தாய்மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறோம். ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை. தாய்மொழியில் படிக்கும்போது, மாணவர்கள் சிறப்பாக புரிந்து கொள்வர். மேற்படிப்புகளில் அதிக ஆர்வம் ஏற்படும்.தற்போது 5 சதவீத மாணவர்களே மேற்படிப்பை தொடர்கின்றனர். நம் இளைஞர்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காகவே, ஹிந்தி அல்லது பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.