பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவ - மாணவியரிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வந்த தகவலை அடுத்து, அவர்களது பைகளில் நேற்று சோதனை நடந்தது.
பைகளில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், கருத்தடை சாதனம், கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள், 'லைட்டர்'கள், போதைக்காக பயன்படுத்தும் 'ஒயிட்னர்'கள், அதிகமான பணம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
பேரதிர்ச்சி
உடனுக்குடன் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களின் நடவடிக்கைகள், மாநிலத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சமீப நாட்களாக, சிறார்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
இளம் வயதிலேயே சிறார்கள் புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது, வீட்டுக்கு தெரியாமல் பணம் திருடுவது, படிப்பில் ஆர்வம் காண்பிக்காமல் ஊர் சுற்றுவது, மொபைல் போன்களில் ஆபாச படங்கள் பார்ப்பது உட்பட, பல விதமான தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவ - மாணவியர் மொபைல் போன் பயன்படுத்த, பெற்றோர் வாய்ப்பளிக்காத நிலை இருந்தது.
கொரோனா தொற்று பரவிய பின், அனைத்து பள்ளிகளிலும், 'ஆன்லைன்' வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்விக்காக பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு புதிதாக 'ஸ்மார்ட் மொபைல் போன்'கள் வாங்கி கொடுத்தனர்.
தற்போது, தொற்று கட்டுக்குள் வந்து, மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரத் துவங்கி விட்டனர்; ஆனால், மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர்.
புகார்
போனில் விளையாட்டு விளையாடுவது, ஆபாச படங்கள் பார்ப்பது உட்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பள்ளிகளுக்கும் திருட்டுத்தனமாக போன் கொண்டு வந்து, பாடங்களை கவனிக்காமல் கோட்டை விடுவதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை அடுத்து, கர்நாடக தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாக கூட்டமைப்பின் உத்தரவுப்படி, பெங்களூரின் பல பள்ளிகளின் ஆசிரியர்கள், நேற்று முன்தினம் எட்டு, ஒன்பது, 10ம் வகுப்பு மாணவ - மாணவியரின் புத்தகப் பைகளில் சோதனையிட்டனர்.
பலரின் பைகளில், மொபைல் போன் மட்டுமின்றி, ஊகிக்கவே முடியாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாணவி ஒருவரின் பையில், கருத்தடை சாதனமான 'காண்டம்' கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பற்றி கேட்டபோது, தன்னுடன் படிப்பவர்கள், தனியார் 'டியூஷனில்' உள்ளவர்கள் மீது குற்றம் சாட்டினார்.
நடவடிக்கை
மேலும் சிலரின் பைகளில், மொபைல் போன்கள் மட்டுமின்றி, கர்ப்பத் தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள், போதைக்காக பயன்படுத்தும் ஒயிட்னர்கள், அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டன.
மாணவர் ஒருவரின் தண்ணீர் பாட்டிலில், மதுபானம் நிரப்பப்பட்டிருந்தது தெரிந்தது.
இதைக் கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரின் பெற்றோரை அழைத்து, அனைத்தையும் விளக்கினர்; பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின், மாணவர்களை கண்காணிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தி, ஆசிரியர்கள் அவர்களை அனுப்பி வைத்தனர்.
'பிள்ளைகளின் நடவடிக்கையை, பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தவறான பாதையில் சென்றால், எச்சரித்து சரி செய்வது அவசியம்' என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்திஉள்ளனர்.
நாகரபாவி பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:
மாணவ - மாணவியரின் பைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. பெற்றோரும் கூட பீதியடைந்துள்ளனர். பிள்ளைகளிடம் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றங்கள் குறித்தும், எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஒத்துழைப்பு
சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரை பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்வதற்கு பதில், அவர்களுக்கும், பெற்றோருக்கும் கவுன்சிலிங் அளிக்கும்படி, பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சூழ்நிலையை எச்சரிக்கையாக கையாளும்படி, பெற்றோருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது மாணவர்களுக்கு, 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளோம். மாணவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரின், 80 சதவீதம் பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளோம். ஒரு மாணவரின் பையில், கர்ப்பத் தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு மாணவரின் தண்ணீர் பாட்டிலில், மதுபானம் இருந்தது.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முயற்சிக்கிறோம். சில மாணவர்கள், தங்களின் சக மாணவர், ஆசிரியர்களுக்கு தொல்லை கொடுப்பது, ஆபாச வார்த்தையால் திட்டுவதும் இத்தகைய பழக்கத்தால் என நினைக்கிறேன்; இது கவலைக்குரிய விஷயம்.
-- சசிகுமார், செயலர்,
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு.