'காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி...' என, டீ கடை ரேடியோ உரக்க பாடிக் கொண்டிருக்க, ''அடடா... 'சிச்சுவேஷன் சாங்'னா இதான் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''யாரு, எதுக்காக காத்திருக்காங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கற மனுக்களை, வட்ட வழங்கல் அதிகாரிகளும், உதவி ஆணையர்களும் நன்னா பரிசீலிச்சு கார்டு வழங்க ஒப்புதல் தருவா... இப்படி தமிழகம் முழுதும் ஒப்புதல் தரும் ரேஷன் கார்டுகளை, தனியார் ஒப்பந்த நிறுவனம் அச்சிட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு தபால்ல அனுப்பிச்சுண்டு இருந்தது ஓய்...

''இந்த நடைமுறையால, விண்ணப்பதாரர்களுக்கு கார்டு கிடைக்கறது லேட்டாச்சு... அதனால, தனியார் ஒப்பந்த நிறுவனத்தை 'கழற்றி' விட்டுட்டு, சென்னையில மாவட்ட துணை ஆணையர் அலுவலகங்கள், மற்ற மாவட்டங்கள்ல வழங்கல் அலுவலகங்கள்லயே புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிச்சு, வினியோகிக்க அரசு உத்தரவு போட்டுடுத்து ஓய்...
''அப்படி இருந்தும், ரேஷன் கார்டுகள் குடுக்க கால தாமதம் பண்றா... இதனால, கார்டுக்கு காத்துண்டு இருக்கறவா வெறுத்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.