குடியாத்தம்:குடியாத்தம் அருகே, கிராமத்தில் புகுந்த சிறுத்தை, ஆடுகளை அடித்து கொன்றதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே சில கிராமங்கள், தமிழகம் - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளன. வன விலங்குகள் தமிழக பகுதிக்கு வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், குடியாத்தம் அருகே, கொட்டார மடகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 56, என்பவர் நேற்று காலை, 10 ஆடுகள், ஐந்து மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து வெங்கடேசன் வனப்பகுதிக்குள் சென்றபோது, இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன.
குடியாத்தம் வனத்துறையினர் விசாரணையில், ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றதும், தண்ணீருக்காக ஆந்திர மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து, 10க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளதும் தெரிந்தது.
இதனால், கிராம மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.