சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம், சதுரங்கப்பட்டினத்தில், தொல்லியல் பாரம்பரிய டச்சுக்கோட்டை வளாக பகுதியில், கடந்த 1926 முதல், போலீஸ் நிலையம் இயங்கியது.
இதன் கட்டடம் பலவீனமடைந்ததால், புதிதாக கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், தொல்லியல் துறையின் தடையால், புதிய காவல் நிலைய கட்டடம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, பூந்தண்டலம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2020 முதல் இயங்குகிறது.
பழைய போலீஸ் நிலைய பகுதியில், போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவை, தற்போதும் அகற்றப்படாமல் உள்ளன.
மணல் கடத்தல் பறிமுதல், வாகன திருட்டு உள்ளிட்ட குற்றங்கள், விபத்து வழக்குகள் தொடர்பான வாகனங்கள், பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டு, முற்றிலும் துருப்பிடித்து உருக்குலைந்து, முட்புதர் சூழ்ந்து, அலங்கோலமாக கிடக்கின்றன.
பாரம்பரிய கோட்டை நினைவுச்சின்னத்தை பராமரித்து, சுற்றுலாவிற்கு மேம்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், கட்டடம் வாகன குவியலுடன் அலங்கோலமாக இருக்கிறது.
எனவே, குவிந்து கிடக்கும் வாகனங்களை அகற்றி, சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.