உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:.
என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துக் கொண்ட தமிழனை வீழ்த்த முடியாது' என்கிறார், முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்.
திராவிட மாயையில் சிக்கிய தமிழன், 50 ஆண்டு களாக விழித்து கொள்ளாமல் இருப்பது தான் உண்மை நிலவரம். சமூக நீதி என்ற பெயரிலும், இடஒதுக்கீடு என்ற பெயரிலும், தமிழகத்தில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினர், உயர்ந்த நிலைக்கு சென்றாலும், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீட்டின் பலன் கிடைத்தபடி தானே இருக்கிறது; இது எந்த வகையில் நியாயம்?
முற்பட்ட வகுப்பில் பிறந்த பாவத்திற்காக, பலருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு, வறுமையில் தானே வாடுகின்றனர். இந்த லட்சணத்தில், 'தமிழன் விழித்து விட்டான்; அவனை ஏமாற்ற முடியாது' என்று முதல்வர் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
தி.மு.க.,வினர், உண்மையிலேயே சமூக நீதி காவலர்கள் என்றால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளித்த, மத்திய அரசின் சட்டத்தை வரவேற்றிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டை உறுதி செய்த பின்னும், அதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக கூறுகின்றனரே... அது எந்த வகையில் நியாயம்?
![]()
|
அரிதாரம் பூசி, 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருபவர்கள், திராவிட செம்மல்கள் தான் என்பது, விழித்துக் கொண்ட தமிழனுக்கு மட்டுமே தெரியும். தமிழர்கள் அனைவரும் உண்மையிலேயே விழித்துக் கொண்டிருந்தால், சட்டசபை தேர்தல் நேரத்தில், தி.மு.க., அள்ளி விட்ட பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஓட்டளித்திருக்க மாட்டார்கள்... முதல்வர் பதவிக்கு ஸ்டாலினும் வந்திருக்க முடியாது!
அதனால், ஸ்டாலின் சொல்வது போல, தமிழர்கள் விழித்துக் கொள்ளவில்லை; அவர்கள் இன்னும் துாக்கத்தில் தான் இருக்கின்றனர். அந்தத் துாக்கம் தொடரும் வரை, ஸ்டாலின் உள்ளிட்டோரின் பொய் மூட்டைகள் செல்லுபடியாகும்!