புதுடில்லி : காதலியை கொலை செய்து, 35 துண்டுகளாக்கியதை, உண்மை கண்டறியும் சோதனையில் அவருடைய காதலன் அப்தாப் புனேவாலா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், கொலை செய்ததற்காக அவர் வருத்தப்படவில்லை என தெரிகிறது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா மற்றும் ஷ்ரத்தா வால்கர் பழகி வந்தனர். இதற்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் புதுடில்லியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். மகளுடன் தொடர்பு கொள்ள முடியாததால், ஷ்ரத்தாவின் பெற்றோர் அளித்த புகாரை போலீசார் விசாரித்தனர்.
அப்போது, கடந்த மே மாதமே ஷ்ரத்தாவைக் கொலை செய்து, 35 துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, நவ., 12ல் கைது செய்யப்பட்ட அப்தாபிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆனால், போதிய ஒத்துழைப்பை அவர் வழங்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் அப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 'பாலிகிராப்' என்ற பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது.
![]()
|
'இந்தப் பரிசோதனையின்போது, ஷ்ரத்தாவைக் கொலை செய்ததை அப்தாப் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், கொலை செய்ததற்கு எந்த வருத்தமும் அவர் தெரிவிக்கவில்லை' என, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அப்தாபுக்கு, 'நார்கோ அனாலசிஸ்' எனப்படும் உண்மை கண்டறியும் அடுத்த கட்ட பரிசோதனை இன்று நடக்க உள்ளது. இந்த பரிசோதனைகளில் அப்தாப் தெரிவிக்கும் தகவல்கள் சட்டப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதே நேரத்தில் இந்த தகவல்களின் அடிப்படையில், போலீசார் மேல் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்க முடியும்.