ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், சீமை கருவேல மரங்கள் குறித்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த தினைக்குளம் அரசுபள்ளி மாணவர்கள், 'தங்கள் ஆய்வு கட்டுரைக்கு 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து வெளியான செய்தி கட்டுரைகள் உதவியாக இருந்தன' என தெரிவித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டம் முழுதும் 100 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
'தினமலர்' நாளிதழில் தொடர்ச்சியாக வெளியான சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த கட்டுரைகளை, தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் அப்சல் கான், பிளஸ் 1 மாணவர் யாஸ்கர் சேகரித்தனர்.
அவற்றை மேற்கோள் காட்டி, சுற்றுச்சூழல் குறித்த புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்; ஆய்வு கட்டுரையும் சமர்ப்பித்தனர். தேர்வு செய்யப்பட்ட 12 கட்டுரைகளில் இவர்களின் ஆய்வு கட்டுரை, மிக சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. துாத்துக்குடியில் வரும் 11ல் நடக்கும் மாநில அறிவியல் மாநாட்டில் இவர்கள் பங்கேற்கின்றனர்.
மாணவர்கள் கூறுகையில், 'எங்கள் ஆய்வு, செயல் திட்டங்களுக்கு 'தினமலர்' நாளிதழில் வெளியான கட்டுரைகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன' என்றனர்.