பெரியகுளம்: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியில், தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வேகப்பந்து வீரர் கோபிநாத் 32, தேர்வாகியுள்ளார்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமரேசன் மகன் கே. கோபிநாத். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட விபத்தில் இடதுகை பலகீனமானது. 7 வயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட பி.இ., பட்டதாரி கோபிநாத்.
சிவகங்கை கே.எல்.என். பொறியியல் கல்லுாரியில் படிக்கும் போது அனைத்து வீரர்களும் விளையாடும் கிரிக்கெட்டில் வேகப்பந்து மற்றும் ஆல் ரவுண்டர் வீரரானார். அணிக்கு கேப்டனாக பல்கலை அளவில் நடந்த போட்டியில் இவரது அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேஷன் அணியில் இரு ஆண்டுகளாக விளையாடுகிறார்.
கடந்தாண்டு தென்னிந்திய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி பங்கேற்ற போட்டி ஆந்திராவில் நடந்தது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி அணிகள் மோதி தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது. இதில் சிறந்த பந்து வீச்சாளராக கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன் மும்பையில் நடந்த தேசிய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதிச்சுற்றில் தமிழ்நாடு, புதுச்சேரி அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இத்தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார். மணிக்கு 120 முதல் 130 கி.மீ., வேகத்தில் பந்து வீசி எதிரணியை திணறடிப்பார்.
இந்திய அணிக்கு தேர்வு:
இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக டிச.,3ல் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்தியா-- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் 'பிரிடம் டிராபியில்' இந்திய அணி சார்பாக விளையாட கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோபிநாத் கூறுகையில் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம். உலக கோப்பையில் விளையாடுவது எனது லட்சியம். குடும்பத்தினர், அணி கேப்டன் சிவக்குமார், வீரர்கள், நண்பர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர் என்றார்.