இந்த பிரபஞ்சம் முழுதும் ஒன்றே என்ற உணர்வை மேம்படுத்த பாடுபடுவோம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

'இந்த பிரபஞ்சம் முழுதும் ஒன்றே' என்ற உணர்வை மேம்படுத்த பாடுபடுவோம்!

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | கருத்துகள் (46) | |
'ஜி-20'-ன் முந்தைய 17 தலைமை நாடுகள் எடுத்த முயற்சிகளால் ஏற்பட்ட விளைவுகளில் 'மேக்ரோ எக்கனாமிக்ஸ்' எனப்படும் பருப்பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை முறைப்படுத்துதல், நாடுகள் மீதான கடன் சுமையை தளர்த்துதல் ஆகியவை அடங்கும்.இந்த சாதனைகள் மூலம் நாம் பயன்பெறுவோம், இவற்றால் மேலும் வளர்ச்சியடைவோம். இருப்பினும் இந்த முக்கியமான பொறுப்பை
Modi, PM Modi, Narendra Modi,G20, மோடி, பிரதமர், நரேந்திர மோடி

'ஜி-20'-ன் முந்தைய 17 தலைமை நாடுகள் எடுத்த முயற்சிகளால் ஏற்பட்ட விளைவுகளில் 'மேக்ரோ எக்கனாமிக்ஸ்' எனப்படும் பருப்பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை முறைப்படுத்துதல், நாடுகள் மீதான கடன் சுமையை தளர்த்துதல் ஆகியவை அடங்கும்.

இந்த சாதனைகள் மூலம் நாம் பயன்பெறுவோம், இவற்றால் மேலும் வளர்ச்சியடைவோம். இருப்பினும் இந்த முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், ஜி-20 மேலும் சிறப்பாக செயல்பட முடியுமா; அடிப்படையான மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கிரியா ஊக்கியாக நாம் செயல்பட்டு, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன் அளிக்க முடியுமா என, எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். நம்மால் முடியும் என்று நான் நம்புகிறேன்!


ஐந்து அடிப்படை அம்சங்கள்



நம் சூழ்நிலைகளால் நம் மனப்போக்குகள் வடிவமைக்கப்படுகின்றன.

வரலாறு முழுதும் மனிதகுலம் பற்றாக்குறையில் வாழ்ந்துள்ளது. அளவான ஆதார வளங்களுக்காக நாம் போராடினோம்.

ஏனெனில் நம் வாழ்வு என்பது அவற்றை மற்றவர்களுக்கு மறுப்பதை சார்ந்திருந்தது. சிந்தனைகள், கோட்பாடுகள், அடையாளங்கள் ஆகியவற்றுக்கு இடையே மோதலும், போட்டியும் இயல்பானதாக மாறியிருந்தது.

துரதிருஷ்டவசமாக அதே மனநிலையில் இன்றும் கூட நாம் சிக்கியிருக்கிறோம்.

நிலப்பரப்புக்காக அல்லது ஆதார வளங்களுக்காக நாடுகளுக்கு இடையே நடக்கும் போராட்டங்களில், இதை நாம்காண்கிறோம்.

அத்தியாவசியப் பொருட்களின் வினியோகங்கள் ஆயுதங்களாக மாற்றப்படும்போது, இதை நாம் காண்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட ஒரு சிலர், தடுப்பூசிகளை பதுக்கியதில், இதை நாம் காண்கிறோம்.

மோதலும், பேராசையும் மனித இயல்பு என்று சிலர் வாதிடலாம்; அதை நான் ஏற்கவில்லை. இயல்பாகவே மனிதர்கள் சுயநலக்காரர்கள் என்றால், நாம் அனைவரும் ஒன்று என்ற அடிப்படை சிந்தனை கொண்ட, பல ஆன்மிக பாரம்பரியங்களின் நீடித்த வேண்டுகோளுக்கு என்ன விளக்கம் தர முடியும்?

இந்தியாவில் பிரபலமாகியுள்ள இத்தகைய பாரம்பரியத்தில், அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற ஜடப்பொருட்களும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச தத்துவம் என்னும் ஐந்து அடிப்படை அம்சங்களால் உருவாகியவையே.

நமக்குள்ளும், நமக்கிடையேயுமான நல்லிணக்கம் மற்றும் இந்த அம்சங்களுடன் இயைந்து செல்வது ஆகியவை, நமது ஆரோக்கியம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நலன்களுக்கு மிகவும் அவசியம்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், 'இந்த பிரபஞ்சம் முழுதும் ஒன்றே' என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். எனவே, நம் கருப்பொருள், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதாகும்.

இது வெறும் முழக்கம் மட்டுமல்ல; நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச்சூழல்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது. இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள, நம்மிடம் வழிமுறைகள் உள்ளன.


போருக்கு அவசியமில்லை



இன்று, வாழ்வதற்கு போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை; நம் யுகத்தில், போருக்கு அவசியமில்லை; உண்மையில் அது தேவையே இல்லாத ஒன்று. இன்று, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் போன்ற மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டால், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது; ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு காண முடியும்.

அதிர்ஷ்டவசமாக, இன்றைய தொழில்நுட்பம், மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நமக்கு வழிகளை வழங்கியுள்ளது. இன்று நாம் வாழும் மிகப்பெரும் மெய்நிகர் உலகத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமாகும்.


latest tamil news


ஆறில் ஒரு பகுதி மனிதர்களைக் கொண்ட, வேறுபட்ட பல மொழிகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகளை உள்ளடக்கிய இந்தியா, உலகின் ஒரு சிறிய வடிவம். கூட்டாக முடிவெடுக்கும் பழமையான மரபுகளுடன், ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு, இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்குகிறது.

ஜனநாயகத்தின் தாயகம் என்ற அடிப்படையில், இந்தியாவின் முடிவுகள், கட்டாயத்தின் அடிப்படையில் அல்லாமல், பல கோடிக்கணக்கான குரல்களின் நல்லிணக்க சங்கமத்தின் மூலம் அமைகிறது.

இன்று இந்தியா, மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மக்களை மையமாக கொண்ட நம் ஆட்சி முறை, திறன்மிக்க இளைஞர்களின் படைப்பாற்றல் தன்மையை ஊக்குவிக்கும் அதேவேளையில், மிகவும் விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் கவனத்தில் கொள்கிறது.

தேசிய வளர்ச்சி என்பதை மேல்தட்டு மற்றும் அடித்தட்டு ஆட்சி முறையாக அல்லாமல், மக்கள் தலைமையிலான, மக்கள் இயக்கமாக உருவாக்க, முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்களுக்கான டிஜிட்டல் சேவைகள், சிறந்த முறையில் அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கும் இடையே செயல்படக் கூடியதாக அமையும் வகையில், தொழில்நுட்பத்தை ஊக்குவித்துள்ளோம்.


முன்னேற்றம்



இது சமூக பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம், மின்னணு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றத்தை வழங்கியுள்ளது. இந்த காரணங்களால், இந்தியாவின் அனுபவம், உலகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடியபார்வைகளை வழங்கும்.

நம் ஜி-20 தலைமைத்துவத்தின்போது நாம், இந்தியாவின் அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை, அனைவருக்கும் வழங்க முடியும்; குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க இயலும்.

நம் ஜி-20 முன்னுரிமைகள், ஜி-20 உறுப்பு நாடுகளுடனான ஆலோசனைகளோடு மட்டுமே வடிவமைக்கப்படாமல், இதுவரை இவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, தென்பகுதி நாடுகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

ஒரே பூமியை சீர் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஒரே குடும்பம் என்ற நல்லிணக்கத்தை வளர்த்து, ஒரே எதிர்காலம் என்ற நம்பிக்கையை வழங்குவதில், நம் கவனம் திகழும்.

நம் புவிக்கோளை ஆரோக்கியமாக வைத்திருக்க, இயற்கையைப் பாதுகாக்கும் இந்திய பாரம்பரியத்தின் அடிப்படையில் நீடிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை, நாம் ஊக்கப்படுத்துவோம்.

மனிதகுலத்திற்கு இடையே இணக்கத்தை மேம்படுத்த, உணவு, உரங்கள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய வினியோகத்தை அரசியல் மயமாக்கலிலிருந்து விடுவிக்க, நாம் முயற்சிகளை மேற்கொள்வோம்.

இது புவி - அரசியல் பதற்றங்கள், மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்காமல் இருக்கும். நம் சொந்தக் குடும்பங்களில் கூட, அதிகபட்ச கவனம் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது; இது உலகளவிலும் பொருந்தும்.


ஊக்குவிப்போம்



நம் எதிர்கால தலைமுறைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களை குறைக்கவும், உலகளாவிய பாதுகாப்பை விரிவுபடுத்தவும், மிகவும் சக்தி மிக்க நாடுகளுடன் நேர்மையான உரையாடலை நாம் ஊக்குவிப்போம்.

இந்தியாவின் ஜி-20-ன் மையப்பொருள் என்பது, அனைவரையும் உட்படுத்தியதாக, லட்சியமிக்கதாக, செயல்பாடுகள் சார்ந்ததாக, உறுதியானதாக இருக்கும். புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக, இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க, நாம் அனைவரும் ஒருங்கிணைவோம்.

மனிதநேயத்தை மையமாக கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்!


latest tamil news



- நரேந்திர மோடி, இந்திய பிரதமர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X