சென்னை: சென்னை ஐ.சி.எப்., ஆலையில், இயற்கை அழகை காணும் வகையில் கண்ணாடி கூரையோடு, 11 'விஸ்டாடோம்' ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
சென்னை பெரம்பூரில் இருக்கும் ஐ.சி.எப்., தொழிற்சாலையில், பயணியர் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மெட்ரோ, அதிநவீன ரயில், சுற்றுலா மற்றும் ராணுவத்துக்கான ரயில் உட்பட 175 வகையில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிதி ஆண்டில் எப்போதும் இல்லாத எண்ணிக்கையாக, 4,275 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி
'வந்தே பாரத்' உள்ளிட்ட பல்வேறு புது வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான பயணியர் ரயில் பெட்டிகளை தவிர, ராணுவம், சுற்றுலா போன்ற தேவைக்காக, புது வகையான பெட்டிகளும் தயாரித்து வழங்கப்படுகின்றன. உள்நாட்டு தேவைக்கு மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது தயாரிக்கப்பட்டு வரும், எல்.எச்.பி., விஸ்டாடோம் சுற்றுலா பயணியர் ரயில் பெட்டிகளுக்கு, வெளிநாடுகளிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது குறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: இந்த நிதி ஆண்டில், மொத்தம் 20 விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது, 11 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. மலை பகுதி, சுற்றுலா இடங்களில், இயற்கை அழகை காணும் வகையில், கண்ணாடி கூரையோடு ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சாகசப் பயணம்
இயற்கையான சூழலில், மலைகளையும் அருவிகளையும் காணலாம். கண்ணாடி கூரைகளுடன் பெரிய கண்ணாடி ஜன்னல்களும், வசதியான இருக்கைகளும் இந்த விஸ்டாடோம் ரயில் பெட்டிகளில் இருக்கும்.
இந்த ரயில் பெட்டியில் உட்கார்ந்து பயணிக்கும்போது, காட்டுக்குள் சாகசப் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கும். 360 டிகிரி கோணத்திலும் இயற்கையை ரசிக்க முடியும். ஒரு பெட்டியில், 44 இருக்கைகள் மட்டுமே இருக்கும். 'வைபை' மற்றும் ஜி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.