''கோவைக்கு பல புதிய கோரிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன; விரைவில் காது குளிர அறிவிப்பு வரும்,'' என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், 2,415 கி.மீ., ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இவற்றில், கடந்த நிதியாண்டில், 244 கி.மீ., ரோடு, ரூ.250 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இந்த ஆண்டில், 151 கி.மீ., துாரமுள்ள ரோட்டில், ரூ.216 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன; வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்.
தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடக்கிற மாவட்டமாக கோவை உள்ளது. இங்கு அதிக விபத்து நடப்பதாக, 37 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 13 இடங்களை சீரமைக்க ரூ.4.25 கோடி மதிப்பில் பணிகள் நடக்கின்றன. அ.தி.மு.க., போராட்டம் அறிவித்ததால், இன்று(நேற்று) இந்த ஆய்வு நடப்பதாக கூறுவது சிரிப்பு வரவழைக்கிறது.
இப்போது கோவையில் ரோடுகள் இவ்வளவு மோசமாக இருப்பதற்கு, முந்தைய ஆட்சிதான் காரணம். போன ஆட்சியில் துவக்கிய பாலங்களை நாங்கள் கைவிட்டு விட்டதாக தகவல் பரப்புகிறார்கள். தமிழகத்தை, 6.5 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றார்கள். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அரைகுறையாக விட்டுசென்ற பணிகளுக்கு, ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
![]()
|
இரண்டாம் கட்டமாக, சிறுவாணி ரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு வரை இணைக்கப்படும். மேட்டுப்பாளையம் பை-பாஸ் திட்டத்தை, நாங்கள் மத்திய அரசுக்கு தள்ளிவிடவில்லை. காரமடை, மேட்டுப்பாளையத்துக்கு தனித்தனியாக பை-பாஸ் அமைக்க முயற்சி நடந்தது. தேவையின் பொருட்டு, அந்தப் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை எடுத்தது.
விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு விட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை என்பதால், இரு ஊருக்கும் ஒரே பை-பாஸ் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து திட்ட மதிப்பீடு கேட்டது. அதை தயாரித்து, விரிவான திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்து விட்டோம். இதுதொடர்பாக, துறை செயலர் கடந்த வாரம் டில்லி சென்று பேசி வந்துள்ளார்; அதற்கு முன்னுரிமை கொடுத்து விரைவாக கொண்டு வருவோம். கோவைக்கு பல புதிய கோரிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன; விரைவில் காது குளிர அறிவிப்பு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறுகையில்,''ஜப்பான் நாட்டின் 'ஜைக்கா' நிதியுதவி திட்டத்தில் நடந்துவரும் ஆறு தளங்களை கொண்ட புதிய கட்டுமானப்பணிகள் வரும், 2023 மார்ச் மாதத்துக்குள் முடிந்துவிடும். தீக்காயங்கள் சிகிச்சைக்காக பிரத்யேக பகுதி கட்டப்பட்டு வருகிறது. எட்டு அறுவை சிகிச்சை அரங்குகள், இரு சிறிய அறுவை சிகிச்சை அரங்குகள் இதில் இருக்கும். ''மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க தார் ரோடுகள் போடப்படும். அரசு திட்டங்கள் நிறைவேற நிலம் கையகப்படுத்துவது அவசியம். அன்னுாரில் விவசாயிகள் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-