வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விஜய் நடித்த 'வாரிசு' படம் வெளிட தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அப்படத்தை பொங்கலுக்கு பின் வெளியிட ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
பொங்கல் அன்று விஜய் நடித்த 'வாரிசு' படம், அஜித் நடித்த 'துணிவு' படம் வெளியாக உள்ளன. தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியின் நிறுவனம் சார்பில் 'துணிவு' படம் தமிழகம் முழுதும் 800 தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது.
அதனால் மீதமுள்ள தியேட்டரில் 'வாரிசு' படம் வெளியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான, முதல் நான்கு நாள் வசூல் பெரிய லாபமாக கருதப்படுகிறது.
எனவே பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையில் அதிக தியேட்டர்களில் ஓடும் 'துணிவு' படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் வெளியாகும் 'வாரிசு' படத்தின் வசூல் குறையும் வாய்ப்பு உள்ளது.

இதனால் விஜய் படத்திற்கு வசூல் ரீதியாக எதிர்மறை விமர்சனம் ஏற்படும் என்பதால் பொங்கல் விடுமுறைக்கு பின் படத்தை வெளியிடுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகையில், 'அஜித் படத்தையும், விஜய் படத்தையும் 50:5௦ சதவீதம் அடிப்படையில் தியேட்டர்களில் வெளியிட உதயநிதி நிறுவனம் முன்வர வேண்டும்.
'இரண்டு நடிகர்களின் படங்களும் சமமான எண்ணிக்கையில் தியேட்டர்களில் ஓடினால்தான் யார் படத்திற்கு வசூல் அதிகம், லாபம் அதிகம் என்பது தெரியவரும்' என்றனர்.
- நமது நிருபர் -