சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை (இ-ரூபாய்) ரிசர்வ் வங்கி இன்று(டிச.,1) முதல் சில நகரங்களில் வெளியிடுகிறது. முதல் கட்டமாக, மும்பை, டில்லி, பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் வெளியிடப்படுகிறது. பின்னர் படிப்படியாக ஆமதாபாத், கேங்டாக், கவுஹாத்தி, ஐதராபாத், இந்துார், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா நகரங்களில் வெளியிடப்படும்.
இது குறித்த சந்தேகங்களுக்கு பொருளாதார ஆலோசகர், மும்பை வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் அளித்துள்ள பதில்..
![]()
|
இது கிரிப்டோ கரன்சி-யில் ஒரு வகையா
இவை பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளை போல அல்லாமல் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு, நிதிக் கோட்பாடுகளின்படி செயல்படும் கரன்சியாக இருக்கும். கிரிப்டோ கரன்சிகளுக்கு நிலையான மதிப்பு இல்லை, யாரும் கட்டுப்படுத்துவது இல்லை. டிஜிட்டல் கரன்சிக்கு நிலையான மதிப்பு இருக்கும், அரசால் கட்டுப்படுத்தப்படும்.
டிஜிட்டல் கரன்சி டிஜிட்டல் டோக்கன் வடிவத்தில் இருக்கும். ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போன்று சீரியல் எண், யுனிட்கள், தனிப்பட்ட எண்கள் ஆகியவை டிஜிட்டல் கரன்சியில் வழங்கப்படும். இந்த யுனிட்கள் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டு, கரன்சி புழக்கத்தோடு சேர்க்கப்படும்.
யார் அதை வழங்குவார்கள், இது எப்படி டிரான்ஸ்பர் செய்யப்படும்
ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி-யை வெளியிடும். வணிக வங்கிகள் அதை விநியோகிக்கும்.
பங்கேற்கும் வங்கிகள் வழங்கும் மற்றும் அலைபேசியில் சேமிக்கப்படும் டிஜிட்டல் வாலட் மூலம் பயனர்கள் டிஜிட்டல் கரன்சி-யை உடன் பரிவர்த்தனை செய்ய முடியும். பரிவர்த்தனைகள் நீங்கள் வேறு ஒரு நபருக்கு மாற்றி கொடுக்கலாம் (Person 2 person) மற்றும் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு மதிப்பாக வணிகரிடம் செலுத்தலாம் (person 2 Merchant). நீங்கள் வாங்கும் பொருள்களுக்கான பண மதிப்பை அந்த கடையில் இருக்கும் QR குறியீடுகளைப் பயன்படுத்திச் செலுத்தலாம். வங்கிகளில் வைப்புத்தொகை போன்றவைகளாக மாற்றலாம்.
எந்த பரிமாற்றமும், யாருக்குச் செய்தாலும், அது ரிசர்வ் வங்கியின் டேட்டா மையத்தில் பதிவாகும். ஒருவர் தங்களின் பர்ஸில் பணம் வைத்திருப்பதற்கு பதிலாக, அலைபேசியில் பணம் வைத்திருப்பார்.
![]()
|
வட்டி கிடைக்குமா
மக்கள் தங்கள் பணப்பையில் (Wallet) வைத்திருக்கும் டிஜிட்டல் கரன்சி-க்கு வட்டி அளிப்பதை ரிசர்வ் வங்கி தற்போது ஆதரிக்கவில்லை.
வரி உண்டா
கிரிப்டோ கரன்சியின் மூலமாக கிடைக்கும் லாபத்திற்கு 30 சதவிகிதம் வரி போடப்படுகிறது. ஆனால் டிஜிட்டல் கரன்சி மூலம் லாபம் ஏதும் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் அதற்கு வரி விதிப்பு ஏதும் இல்லை.
பணத்தின் மதிப்பு கூடி, குறையுமா
ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சியானது, காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும். கரன்சி-யின் மதிப்பு ஏறி இறங்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சரியாய் கூறப்போனால் இது தற்போது வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமாகும்.
என்ன லாபம்
நாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிட திட்டமிட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 5000 கோடி ரூபாய் ரூபாய் நோட்டுக்களை அடிப்பதற்காக செலவிடப்படுகிறது. இது குறையும். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க இது வழி வகை செய்யும்.