மதுரை: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உடல்நலக்குறைவால் இறந்ததால் தமிழக கோயில், தனியார், வனத்துறை வளர்க்கும் யானைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் யானைகளை வாங்க, வளர்க்க தற்போது அனுமதியில்லை. ஏற்கனவே வளர்ப்பவர்கள் தமிழக வளர்ப்பு யானைகள் மேலாண்மை, பராமரிப்பு சட்டம் 2011 குறிப்பிடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். ஆனால் யானைகளை வாங்கி கோயில்களுக்கு தானமாக கொடுக்க சட்டத்தில் இடமுண்டு.
யானை வளர்க்கும் இடம் போதுமான உயர, அகலம், மண் தரையாக இருக்க வேண்டும். யானையின் கழுத்து, வயிறு, கால்களில் நைலான் கயிறு, கூர்மையான சங்கிலிகளை பிணைக்க கூடாது.
யானையின் எடை, உடல்நிலைக்கு ஏற்ப சங்கிலி பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வயிற்றை கீழே அமுக்கி யானை உட்கார கூடாது. தமிழக தலைமை வனவிலங்கு காப்பாளர் அனுமதியின்றி வேறு மாநிலம் கொண்டு செல்ல அனுமதியில்லை.
தினமும் 3 மணி நேரத்திற்கு மேல், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்க விடக் கூடாது. இரவு நடக்கும் போது யானையின் முன், பின் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

பாகன், காவடி என அழைக்கப்படும் பராமரிப்பாளர் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை சட்டம் சொல்கிறது. போதிய உணவு கொடுக்காதது, ஊர்வலம் அழைத்து செல்வது, அதிக நேரம் வெயிலில் நிற்கவைப்பது, துணி போர்த்துவது போன்றவற்றால் யானை கோபமடையும்.
ஆனால், சட்டம் சொல்லும் கட்டுப்பாடுகளை தனியார், கோயில் யானை வளர்ப்போர் முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, வளர்ப்பு யானைகள் காப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
யானைக்கு ஓய்வு தேவை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, 26, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கண்புரையால் தவிக்கிறது. கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் சிகிச்சையும் அளித்தனர். கால்நடை துறை சார்பில் தாய்லாந்து டாக்டர்களும் பரிசோதித்தனர். இந்நிலையில் இரு கண் பார்வையும் குறைந்த யானை பார்வதிக்கு இயற்கை சூழலில் ஓய்வு கொடுத்து, பராமரிக்க வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பராமரிப்பு, உடல்நலமில்லா தனியார் வளர்ப்பு யானைகள் வனத்துறையின் திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்படுகின்றன.