வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'கட்சியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்' என, அதிருப்தியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: தி.மு.க.,வின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம் - ஒழுங்கு பிரச்னை உட்பட, பல்வேறு சங்கடங்களையும், குழப்பங்களையும் உருவாக்க, அரசியல் எதிரிகள் நினைக்கின்றனர். பொருளில்லா புதுப்புது வதந்திகளை பரப்ப நினைக்கின்றனர்.அவற்றை புள்ளிவிபரங்கள் வாயிலாக அறுத்தெறிய வேண்டும்.

எதிரிகளின் பிரசாரத்தை நொறுக்குகிற வகையில், தி.மு.க., ஆட்சியின் சாதனை திட்டங்களை முன்வைக்க வேண்டும். கட்சி பதவிகளுக்கு உழைப்புக்கேற்ற வாய்ப்பு, உருவாகும் வாய்ப்புக்கேற்ற பொறுப்பு என, ஒவ்வொரு நிர்வாகியின் தகுதியை கவனத்திலும், கருத்திலும் கொண்டே நியமனங்கள் நடந்துள்ளன. மூத்தவர், இளையவர் என, அனைத்து தரப்பினரும் வேறுபாடு சிறிதுமின்றி பங்கேற்கும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு சிலருக்கு வாய்ப்பு போதவில்லை என நினைக்கலாம். கட்சியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார். உண்மையாக உழைப்பவர்களை, என் கவனத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.