சென்னை: வீடுகளில் பொது சேவை பிரிவுக்கு 1 யூனிட் 8 ரூபாய் கட்டணம் என்பதால் நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் பொது சேவை பிரிவுக்கான கட்டணத்தை குறைக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு உரிமையாளரின் பெயரில் இருக்கும். இது தவிர நடைபாதை விளக்கு, 'லிப்ட், மோட்டார் பம்ப்' போன்றவற்றை உள்ளடக்கிய, 'காமன் சர்வீஸ்' எனப்படும் பொது சேவை மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு பொது பெயரில் இருக்கும். பொது சேவை பிரிவுக்கும், வீடுகளுக்கான மின் கட்டணமே வசூலிக்கப்பட்டது. இதனால் பொது சேவை பிரிவுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய சலுகைகள் கிடைத்தன.

இந்நிலையில் செப்., 10ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில் பொது சேவைக்கு புதிய கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டு 1 யூனிட் கட்டணம் 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது தவிர, மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது சேவைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த, இலவச மற்றும் மானிய சலுகைகள் ரத்தாகியுள்ளன.
இதனால், பழைய கட்டண விகித்தில் பொது சேவை பிரிவுக்கு 1000 ரூபாய், 3000 ரூபாய் என, கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது மூன்று, நான்கு மடங்கிற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், பொது சேவை கட்டணத்தை பகிர்ந்து கொள்வர் என்றாலும், ஏற்கனவே, வீட்டு பிரிவு மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், மின் நுகர்வோருக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொது சேவை பிரிவுக்கு யூனிட்டிற்கு, 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை, வீட்டு பிரிவு கட்டணத்திலேயே, இலவச மற்றும் மானிய சலுகை இல்லாத பிரிவின் கீழ் வசூலிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு, மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அதிக வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் பொது சேவை பிரிவில், 'லிப்ட், போர்வெல் மோட்டார்' போன்றவை உள்ளன. எனவே, 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில், பொது சேவை பிரிவுக்கு தனி கட்டணம் வசூலிக்கலாம். இதனால், அங்கு வசிக்கும் வசதி படைத்தவர்களால் செலவை சமாளிக்க முடியும்.ஆனால் ஐந்து, ஆறு போன்ற ஒற்றை இலக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு, பொது சேவை பிரிவில் யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனக் குமுறல், வரும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.