புதுடில்லி: ''பிரதமருக்கான வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்துமே, மாநில அரசின் கைகளில்தான் உள்ளது. இந்த விவரம் கூட தெரியாதவர்களாக, தி.மு.க., செய்தி தொடர்பாளர்கள் உள்ளனர்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
புதுடில்லி மாநகராட்சித் தேர்தல், டிச. 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக, வந்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
புதுடில்லி நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதில், மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு, முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், போதிய ஒத்துழைப்பும் தரவில்லை. அவர் நலத்திட்டங்களுக்கு செய்த செலவுகளைக் காட்டிலும், தன் சொந்த கட்சியை விளம்பரப்படுத்துவதற்காக செய்த செலவுகள்தான் அதிகம்.

பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவருக்கான உள்வளைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டுமே, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர்கள் மேற்கொள்வர்.
அவரது வெளிவட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும், அந்தந்த மாநில அரசுகளின் போலீஸ் தான் மேற்கொள்வது வழக்கம். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், மாநில அரசின் கைகளில்தான் இருக்கும்.
இந்த விவரங்கள் கூட தெரியாதவர்களாக, தி.மு.க., செய்தி தொடர்பாளர்கள் உள்ளனர். தி.மு.க., கூறும் ஒப்புக்கு சப்பாணி காரணங்களை, மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். கோவை குண்டுவெடிப்பை முதலில் மறுத்தவர்கள்தான் இவர்கள். என்.ஐ.ஏ., அமைப்பின் டி.ஜி.பி., தமிழகம் வந்து ஆய்வு செய்யும் அளவுக்கு நிலைமை உள்ளதை, யாரும் மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.