சென்னை: கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், நடப்பு நிதியாண்டில் நவ., 29ம் தேதி வரை, 10 லட்சம் பேருக்கு, 8,185 கோடி ரூபாய் அளவுக்கு, பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடன் பெற்ற தேதியில் இருந்து, குறித்த காலத்திற்குள் கடனை முழுதும் செலுத்துவோருக்கு வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள், தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
![]()
|
கடன் வாங்கியவர்களே தொடர்ந்து வாங்கி வருகின்றனர். எனவே, புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டது.
இதன் விளைவாக நடப்பு நிதியாண்டில், நவ., 29ம் தேதி வரை, 10.75 லட்சம் பேருக்கு 8,185 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டின் இதே காலத்தில், ௮.௭௧ லட்சம் பேருக்கு, ௫,௯௧௧ கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இம்மாதத்திற்குள் பயிர் கடன் வழங்குவதில், 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடையுமாறு அதிகாரிகளை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால், நடப்பு நிதியாண்டு முடிவடையும், 2023 மார்ச்சுக்குள் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 14.48 லட்சம் பேருக்கு 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டன.