இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 23 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், 'போலியோ' சொட்டு மருந்து செலுத்தும் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க, நேற்று துணை ராணுவ படையினர் வாகனம் உடன் சென்றது.
அப்போது, தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவர், உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி ஒரு ரிக்ஷாவில் வந்தார். குவெட்டா பலேலி என்ற இடத்தில், துணை ராணுவப் படையினர் வந்த வாகனம் மீது ரிக்ஷாவை மோதினார். இதில், வெடிகுண்டுகள் வெடித்து வாகனம் சிதறியது. இந்தத் தாக்குதலில் மூன்று துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்த நிலையில் 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வாகனம் மட்டுமின்றி அருகில் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு வாகனங்களும் வெடித்து சிதறின. இது குறித்து பாக்., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.