திருப்பூர்: வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அரபு நாடுகள் ஜவுளி இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வர்த்தக உறவுகளை வலுப்படுத்த, ஐக்கிய அரபு நாடுகளுடன் இந்தியா பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதனால், இரு நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்தியாவின், ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி, 2020ல், 11 ஆயிரத்து, 378 கோடி ரூபாயாக இருந்தது; 2021ல், 14 ஆயிரத்து, 409 கோடியாக உயர்ந்தது. வர்த்தக மேம்பாட்டு ஆய்வறிக்கையில், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும், 'டாப் 5' நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
மொத்தம், 43.2 சதவீத பங்களிப்புடன் சீனா முதலிடத்திலும், 29.6 சதவீதத்துடன் இந்தியா இரண்டாமிடத்திலும் இருக்கிறது. வங்கதேசம், 5.2 சதவீத பங்களிப்புடன் மூன்றாமிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின், மொத்த பின்னலாடை இறக்குமதி, 3,493 கோடியில், இந்தியாவின் பங்களிப்பு, 1,370 கோடி ரூபாய். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, நாட்டின் ஜவுளி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில்,''ஐக்கிய அரபு நாடுகள் பருத்தி நுாலிழையிலான பின்னலாடைகளையே பெரிதும் விரும்புகின்றன. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், சிக்கலான சூழலிலும் அந்நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் தடையில்லாது தொடர்கிறது. ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது; பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து வரியில்லாத ஒப்பந்தம் நிறைவேறினால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.