சென்னை : ''கர்ப்பிணியருக்கான யோகா பயிற்சியால், அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறைந்து வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 'இந்தியன் ஆயில்' நிறுவனத்தின், 25 லட்சம் ரூபாய் சமூக பொறுப்பு நிதியில், மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தியை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 2017 முதல் 2019 வரை பிறந்த ஒரு லட்சம் குழந்தைகளில், மகப்பேறு மரணம் விகிதம், 58 ஆக இருந்தது; 2020 - 2022ம் ஆண்டுகளில், 54 ஆக குறைந்துள்ளது.
![]()
|
நடவடிக்கைகள்
அதேபோல, 1,000 குழந்தைகளில், 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 15ல் இருந்து, 13 ஆக குறைந்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளில், சுக பிரசவங்கள் அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், மகப்பேறு மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தியது மட்டுமின்றி, கர்ப்பிணியருக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், யோகா போன்ற பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் பயனாக, 43 சதவீதமாக இருந்த அறுவை சிகிச்சை பிரசவங்கள், 38 சதவீதமாக குறைந்தது. மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காலி பணியிடங்கள்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,308 பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 7.25 கோடி மக்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 99 ஆயிரத்து 435 படுக்கை வசதிகள் உள்ளது.
அதேநேரம், 24 கோடி மக்கள் தொகை உள்ள உத்தர பிரதேசத்தில், 66 ஆயிரத்து 700 படுக்கை வசதிகளும்; 11 கோடி மக்கள் தொகை கொண்ட மஹாராஷ்டிராவில், 31 ஆயிரத்து, 28 படுக்கை வசதிகளும்; 6.5 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில், 29 ஆயிரத்து 402 படுக்கை வசதிகளும் உள்ளன.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளது. செயற்கை கருத்தரித்தல் மையம் சென்னை, திருச்சி, மதுரையில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.