சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்படும் போது, அதன் எண்ணிக்கை 24 ஆக உயருகிறது. இதனால், மண்டலக்குழு தலைவர் பதவியை பிடிக்க அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., தலைமை முக்கிய வீடுகளில், பல கவுன்சிலர்கள் காத்திருக்க துவங்கியுள்ளனர். மேலும், தற்போது பதவியிலுள்ள சிலரின் தலைவர் பதவிகளும், பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளை உள்ளடக்கி, 15 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதேநேரம், கடந்த 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், மாநகராட்சியுடன் இணைந்தாலும், வருவாய் மற்றும் சட்டசபை தொகுதிகள், சென்னை மாவட்டத்தோடு இணைக்கப் படாமல் உள்ளன.
தற்போது வரை, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலேயே தொடர்கின்றன.
இதற்கிடையே, நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சி மண்டலங்களை, சட்டசபை தொகுதிகள் அடிப்படையில் பிரிப்பதற்கான பணியை மேற்கொண்டு, முதற்கட்ட பணியை மாநகராட்சி முடித்துள்ளது.
இதன்படி, சென்னை மாநகராட்சியில் மூன்று லோக்சபா தொகுதிகள், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரிய சட்டசபை தொகுதிகள் என்ற அடிப்படையில், 24 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. தற்போது, மண்டல வரையறை செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் இறுதி செய்யப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என, மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் 24ஆக உயரும்பட்சத்தில், கூடுதலாக ஒன்பது பேருக்கு மண்டலக்குழு தலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், மண்டலக்குழு தலைவராக இருக்கும் சிலரின் வார்டுகள், ஒரே சட்டசபை தொகுதிக்குள் வருவதால், இருவரில் ஒருவரின் பதவிக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலராக வெற்றி பெற்ற 142வது வார்டு மற்றும் ஆலந்துார் மண்டலக்குழு தலைவர் துரைராஜ் வெற்றிபெற்ற 172வது வார்டு ஆகிய இரண்டும், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதிக்குள் வருகின்றன.
இரண்டு தொகுதிகளும், ஒரே சட்டசபை தொகுதிக்குள் வரும்பட்சத்தில், சைதாப்பேட்டை மண்டலக்குழு தலைவராக, இருவரில் ஒருவர் தான் நியமிக்கப்படுவர்.மற்றொருவர் பதவி பறிக்கப்படலாம் அல்லது நிலைக்குழு தலைவர் பதவி போன்றவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனால், புதிதாக மண்டலக்குழு தலைவர் பதவி கோரியும், பதவியை தக்கவைத்துக் கொள்ளவும், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் பலர், நான்கு அமைச்சர்களின் வீடுகளுக்கு தினமும் சென்று, தங்களது இருப்பை காண்பித்து வருகின்றனர்.
மேலும், தி.மு.க., தலைமைக்கு நெருக்கமானவர்களிடத்திலும், பலர் தங்களது விருப்பத்தை தெரிவித்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற, கவுன்சிலர்கள் பலர் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ., உதயநிதி பிறந்தநாளை, பல கவுன்சிலர்கள் சிறப்பாக கொண்டாடி, தி.மு.க., தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அந்தந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களிடமும் பேரம் பேசத் துவங்கி உள்ளனர். ஒருவேளை, தலைமை தங்களது பெயரை அறிவிக்காவிட்டால், ஓட்டெடுப்பில் பங்கேற்று வெற்றி பெற, பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
மண்டலங்கள் அறிவிக்கப்பட்ட பின், மண்டல தலைவர் பதவிக்கான போட்டா போட்டி சூடுபிடிக்கத் துவங்கும். மேலும், ஓரிரு மண்டலங்களில், அ.தி.மு.க.,வினர் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. அவற்றை முறியடிக்கவும், தி.மு.க., கவுன்சிலர்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.