டிஜிட்டல் வழிகாட்டி
திக்கு திசை, தட வழி ஆகிய வற்றைக் காட்ட உதவும் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் பரவலாகிவிட்டது. ஆனால், இன்றும் அடர்ந்த கட்டடங்கள் உள்ள நகர்ப்புறங்களில் அடிக்கடி ஜி.பி.எஸ்., வழிகாட்டிகள் தவறு செய்கின்றன.
இதற்கு மாற்றாக, செயற்கைக்கோளைச் சாராத வழிகாட்டி தொழில்நுட்பம் குறித்து 'நேச்சர்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், மொபைல் போன் சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்டது. இது நகரின் எந்தப் பகுதியிலும் துல்லியமாக இடத்தைக் காட்டும்.
நோய் காட்டிக் கொசுக்கள்
மனித ரத்தத்தை உண்ணும் கொசுக்களால், நோயைப் பரப்பத்தான் முடியுமா? சமூகத்தில் பரவியிருக்கும் நோய்களை அறியவும் அவை உதவக்கூடும். நேச்சர் இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, கொசுக்கள், கடைசியாக குடித்த ரத்தத்தை அலசினால், அந்த ரத்தத்திற்கு உரியவருக்கு, முன்பு என்ன கிருமித் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
ஒரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, முன்பு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை, எளிதில் அறிய சமூக நோயியல் வல்லுநர்களுக்கு இது ஒரு எளிய வழியாக இருக்கும்.
ஹைட்ரஜன் விமானம்
ஆடம்பர கார் தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ், விமான இயந்திரங்களையும் தயாரிக்கிறது. அண்மைக்காலமாக, வர்த்தக விமானங்கள் உலகின் 2.5 சதவீத பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்திற்குக் காரணமாக இருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு பறக்கும் விமான இயந்திரத்தை ஆராய்ந்து உருவாக்கியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.
ஹைட்ரஜனால் இயங்கும் விமானம், சூழலை மாசு படுத்தாது. ஆனால், தற்போதைய ஜெட் எரிபொருட்களைவிட, ஹைட்ரஜனின் விலை நான்கு மடங்கு கூடுதல்.
காற்றால் அசையும் ரோபோ கரம்
ரோபோவின் விரல்களுக்கும், கெட்ச் அப் பாட்டிலுக்கும் தொடர்பு உண்டா? நெதர்லாந்திலுள்ள ஐண்ட்ஹோவன் தொழில்நுட்ப பல்கலைவிஞ்ஞானிகள் தொடர்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
கெட்ச் அப்பை பாட்டிலில் இருந்து பிதுக்கி எடுக்கும்போது, புர்ர்ரென்ற ஓசையுடன் கெட்ச் அப் தெரிக்கும்.
அது ஏன் என்று ஆராய்ந்தபோது, அதிலுள்ள துளை விரிந்து மூடுவதால், அந்த ஓசை வருகிறது. அதே விளைவை, மென் ரோபோ கரங்களின் விரல்களுக்குப் பயன்படுத்தி, காற்றால் துல்லியமாக விரல் அசைவுகளை, விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.
ருசியைக் கூட்டும் நிறங்கள்
சுவை உணர்வுக்கும், உணவு பரிமாறப்படும் பாத்திரங்களின் நிறத்திற்கும் தொடர்பு இருப்பதை ஒரு ஆய்வு உறுதி தெய்துள்ளது.
தேர்ந்தெடுத்து உண்ணும் வழக்கமுள்ளோர், சிவப்பு தட்டுக்களில் உணவை உண்ணும்போது, உணவில் உப்பு துாக்கலாக இருப்பது போலவும், வெள்ளை தட்டுக்களில் உண்ணும்போது, உணவு ருசியாக, திருப்தியாக இருப்பது போலவும் உணர்கின்றனர்.
இது குறித்து, இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலை விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இது, உணவகங்களில் விற்பனையை அதிகரிக்கவும், உணவுக் கட்டுப்பாட்டிலுள்ளோருக்கும் பயன்படும்.