பூமியில் வந்து விழுந்த மிகப் பெரிய விண் கற்களிலிருந்து, இரண்டு புதிய தாதுக்களை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
இரும்புத் தாதுவின் அடிப்படையில் இருக்கும் அந்த இரு புதிய தாதுக்களும், பூமியில் இதுவரை இல்லாத வகையை சார்ந்தவை.
அவை இதுவரை அறியப்படாத புவிவேதியல் முறைகள் மூலம் உருவாகியிருக்கலாம் என்றும், அவற்றுக்கு பல புதிய பயன்கள் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சோமாலியாவின் எல் அலி என்ற பகுதியில் விழுந்திருந்த அந்த விண்கல்லின் எடை மட்டும் 17 டன்கள்.
பூமியில் கண்டெடுக்கப்பட்ட 10 பெரிய விண்கற்கள் பட்டியலில் சோமாலிய விண்கல் இடம்பெற்றுள்ளது. இதை விஞ்ஞானிகள் 2020ல்தான் கண்டுபிடித்தனர்.
என்றாலும் எல் அலி பகுதி மக்கள், அந்தக் கல் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு ஒரு நடுராத்தியில் வந்து விழுந்ததாகச் சொல்கின்றனர்.
அந்தப் பெரும் விண்கல்லிருந்து எடுக்கப்பட்ட மாதிரியை அல்பெர்ட்டா பல்கலை விஞ்ஞானிகள் அலசினர். அப்போது இரு புதிய வகை தாதுக்கள் இருப்பதைஅறிந்தனர்.
ஒரு தாதுவிற்கு எலாலியைட் என்றும் இடப் பெயரையும், இன்னொன்றுக்கு எல்கின்ஸ் டான்டன் என்ற நாசா விஞ்ஞானியின் பெயரின் அடிப்படையில் எல்கின்ஸ்டான்டோனைட் என்றும் பெயரிட்டு உள்ளனர்.
இரண்டு புதிய தாதுக்களுமே இரும்பு, பொலோனியம் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் கூட்டமைப்பைக் கொண்டவை. அடுத்தடுத்து ஆராயும்போது மேலும் பலதாதுக்கள் கிடைக்கலாம்.
ஆனால், அதற்குள் அசல் விண்கல்லை அலேக்காக யாரோ கடத்திக்கொண்டு சீனாவுக்குள் கொண்டுபோய்விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எனவே, விண்கல் ஆய்வாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.