சென்னை ஐ.ஐ.டி., பட்டதாரியான சுஹ்ரித் சுந்தரம், இணை நிறுவனராக துவங்கிய புத்திளம் நிறுவனம் 'அவே பயோ சயன்சஸ்'.
இதன் அசத்தலான தயாரிப்பு தான் 'மைட்டோ பிளஸ்' என்ற முப்பரிமாண உயிரி அச்சியந்திரம்.
அடுத்த சில ஆண்டுகளில் ஒரு மனித உறுப்பை, முழுவதுமாக 'அச்சிடும்' திறனுள்ள முப்பரிமாண உயிரி அச்சியந்திரத்தை உருவாக்குவது தான் அவே பயோ சயன்சஸ் ஆராய்ச்சியாளர்களின் இலக்கு.
என்றாலும் இப்போதைக்கு அசல் மனித திசுக்களை அச்சிடும் 'மைட்டோ பிளஸ்' முப்பரிமாண உயிரி அச்சியந்திரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திசுக்களால் என்ன பயன்? புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவும், உருவாக்கிய மருந்தால், மனித உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா என்று சோதிக்கவும், உயிருள்ள மனித திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவர்.
அடுத்த கட்டமாக, நோயாளியின் உடலில், பழுதடைந்துள்ள உறுப்பிலிருந்து செல்களை எடுத்து, 'உயிரி மை' ஒன்றை உருவாக்கி, அதை மைட்டோ பிளஸ் முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, புதிய உறுப்பை அச்சிட்டுத் தரும் திறன் மிகு இயந்திரமாக மைட்டோ பிளஸ் இருக்கும் என்கின்றனர் அவே பயோசயன்சசின் ஆராய்ச்சியாளர்கள்.