சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் ரவி உறுதி அளித்துள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது.
ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார்.
கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை கவர்னர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று(டிச.,01) கவர்னர் ரவியை சந்தித்தார்.
இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு கூறியுள்ளோம். கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டும் என கோரினோம்.நேரில் விளையாடுவதற்கும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. கடந்த 3ம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

ஆன்லைன் தடை மசோதா பரிசோதனையில் இருப்பதாக கவர்னர் ரவி தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் ரவி உறுதி அளித்துள்ளார். மசோதா குறித்து சில சந்தேகங்கள் உள்ளது. அதனை தெளிவுப்படுத்திக் கொண்டு, ஓப்புதல் தருவதாக கூறினார்.
25 உயிர்கள் பலியானதற்கு காரணமாக இருக்கும், ஆன்லைன் சூதாட்ட ரம்மியை தடை செய்யும் மாறு வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.