வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மும்பையில் சாலையில் நேரலை செய்து கொண்டிருந்த தென் கொரியாவை சேர்ந்த பிரபல யுடியூபரை மானபங்கம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென் கொரியாவை சேர்ந்த பிரபல யுடியூபர் மையோசி இன் என்பவர் நேற்று (நவ.,30) இரவு மும்பை புறநகர் பகுதியான 'கர்' என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடைமறித்த இளைஞர் ஒருவர் கையை பிடித்து இழுத்து சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'நோ நோ' எனக்கூறிய மையோசி இன்-ஐ மீண்டும் நெருங்கி வந்த அந்த இளைஞர் முத்தம் கொடுக்க முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் நடந்து செல்லும் போது, மற்றொரு இளைஞருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும், வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்து மையோசி இன் நடந்து சென்றார். இது அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகியது.
இது தொடர்பாக மையோசி இன் வெளியிட்ட அறிக்கையில்,'' நேற்று இரவு நேரடியாக ஒளிபரப்பு செய்த போது, ஒருவர் என்னை துன்புறுத்தினார். அவர், நண்பருடன் இருந்ததால், பிரச்னையை பெரிதாகாமல் இருக்க முயற்சித்ததுடன் அங்கிருந்து வெளியேற முயன்றேன். அவர்களுடன் நெருங்கி பழகி, பேசியதால் தான் இப்படி நடந்ததாக சிலர் கூறுகின்றனர்'' எனக்கூறியுள்ளார்.

இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தாமாக முன்வந்து, ''பாலியல் துன்புறுத்தல்'' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.