கரூர், டிச. 1-
கரூர் அருகே, தனியார் பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரி என கூறி, பணம் பறிக்க முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், எல்.ஜி.பி., நகரை சேர்ந்தவர் ரகுபதி, 53; இவர், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காக்காவாடி பகுதியில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த ஒருவர், தன்னை வருமான வரி துறை அதிகாரி என கூறி, பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டும் என கூறி, ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
பிறகு, பள்ளி தொடர்பான ஆவணங்களில் குறைபாடு இருப்பதாகவும், 15 ஆயிரம் ரூபாய் தந்தால் சரி செய்துகொள்ளலாம் எனவும் கூறி, ரகுபதியிடம் பணம் பறிக்க முயன்றார். இந்நிலையில் அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரகுபதி, இதுகுறித்து வெள்ளியணை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகரன், 73; என்பதும், போலி அதிகாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர்.