சென்னை: சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், வரும் டிச., 15ம் தேதி தமிழகம் முழுவதும் 100 சிறப்பு பொதுக்கூட்டங்களை நடத்தவும், வரும் 18 ம் தேதி வடசென்னையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாக வெளியான தகவல்: கடந்த முறை ஒரு தொகுதியில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், இந்த முறை அப்படி இல்லாமல் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் செயல்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். நன்றாக செயல்படும் பூத் ஏஜென்ட்களை நியமிக்க வேண்டும். கூட்டணி பற்றி கட்சியினர் கவலைப்பட வேண்டாம். அதனை நான் பார்த்து கொள்கிறேன். புதிதாக அணிகள் உள்ளன. அவற்றிற்கு தனி அதிகாரம் வழங்கும் வகையில் விதிகள் உருவாக்கப்படும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணியுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசியதாக தெரிகிறது.