ஆமதாபாத்: நரேந்திர மோடியை யார் அதிகம் விமர்சிக்கலாம் என்பதில் காங்கிரசில் போட்டி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல் இன்று(டிச.,1) நடக்கும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5 ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது, பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு முன் அக்கட்சியை சேர்ந்த மதுசூதன் மிஸ்திரி, மோடிக்கு அவரது தகுதியை காட்ட விரும்புகிறோம் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.,1) பஞ்ச்மஹால் மாவட்டத்தின் கலோல் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது; என்னை யார் அதிகம் விமர்சித்து பேசலாம் என காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசும் போது, நாயை போல், மோடி இறப்பார் என்றார். மற்றொருவர், ஹிட்லர் போல் மோடி மரணமடைவார் என்றார். மற்றொருவர், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மோடியை கொல்வேன் என்கிறார். ஒரு சிலர் என்னை ராவணன் எனவும், இன்னும் சிலர் ராட்சசன் எனவும், மற்றவர்கள் கரப்பான் பூச்சி என்கின்றனர்.

கடவுள் ராமர் மீது நம்பிக்கையில்லாதவர்கள், தற்போது, ராமாயணத்தில் இருந்து ராட்சச அரசன் ராவணனை இங்கு கொண்டு வருகின்றனர். குஜராத் எனக்கு அளித்த பலத்தால், காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு தலைவர் இங்கு வந்து தேர்தலில், மோடியின் தகுதியை அவருக்கு காட்டுவோம் என்றார். இன்னும் அதிகம் விமர்சிக்க வேண்டும் என விரும்பிய காங்கிரஸ், கார்கேயை அனுப்பியது.குஜராத் ராம பக்தர்கள் நிறைந்த மாநிலம் என்பது காங்கிரசுக்கு தெரியவில்லை. இங்கு வந்த கார்கே, ராவணனை போல், மோடிக்கு நூறு தலைகள் என்கிறார்.

எனக்கு எதிராக கசப்பான வார்த்தையை விட்ட பிறகும் அவர்கள் ஒருபோதும் மனம் திருந்தவில்லை, மன்னிப்பு கேட்பதை மறந்துவிட்டது. அவர்களை கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.