புதுடில்லி: '' ஜல்லிக்கட்டு ஒன்று இல்லாவிட்டால், நாட்டு மாடுகள் இல்லாமல் போயிருக்கும்'', ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2014 ல் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017 முதல் போட்டியை நடத்தி வருகிறது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, 'பீட்டா' உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்களை, நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்துகிறது.

கேள்வி
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. காளைகள் எப்படி 15 மீ., தூரம் மட்டும் ஓட முடியும்? வீரர்கள் அனைவரும் காளையை தொட அனுமதி உள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற 15 சதுர மீ இடம் போதுமானதா?
காளைகள் வெளியேற ஒதுக்கப்பட்ட 100 மீ. தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன? 90 சதுர மீட்டர் குறுகிய இடத்தில் காளைகளை ஓட விடாமல் வீரர்கள் தடுக்கிறார்களா? காளைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம், சென்று சேருமிடம் தவிர ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளனவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தயார்

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும் போது, ஜல்லிக்கட்டு போட்டியின் போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும். இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அவரவர் இடங்களில் தான் நிற்க வேண்டும். காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை. தேவைப்பட்டால், நீதிபதிகளின் கேள்விகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.
தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை. இந்த விளையாட்டு முறை எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும். எங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. நாங்களும் காட்டுகிறோம் என வாதாடினார்.
அழைப்பு
இதனையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ராய், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வந்த பின், எங்களையும் ஜல்லிக்கட்டு பார்க்க அழைக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், கண்டிப்பாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உங்களை அழைப்போம் எனக்கூறினார்.
அழிவு
தொடர்ந்து தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடுகையில், ஜல்லிக்கட்டு ஒன்று இல்லாமல் போயிருந்தால் நாட்டு மாடுகள் இல்லாமல் போயிருக்கும். ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளைகள் படுகொலை செய்யப்படும் என்ற நிலை ஏற்படும். நாட்டு இன காளைகளை பாதுகாப்பதில் மத்திய அரசும், தமிழக அரசும் அக்கறை கொண்டுள்ளன.
உள்நாட்டு காளைகள் அழிந்துவிட்டால் பெரிய ஆபத்து ஏற்படும். காங்கேயம், உம்பலசேரி, புளியங்கும் இன காளைகள் தற்போது குறைந்துவிட்டது. நமது நாட்டில் பாரம்பரிய விலங்குகள் அழிந்து வருகின்றன. அதனாலேயே, வெளிநாட்டில் இருந்து சிறுத்தைகள் வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் வாதிட்டார்.