காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாத ஞாயிற்று கிழமையில், கடை ஞாயிறு விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில், பக்தர்கள் காதில் சீழ் வடிதல், தலைவலி, காது வலி என, தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, நேர்த்தி கடனாக புது மண் சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் சுமந்தபடி கோவிலை வலம் வந்து சுவாமியை வழிபடுவர்.
அதன்படி, கடை ஞாயிறு விழாவின், முதல் வார ஞாயிற்று கிழமைகளில் கச்சபேஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதில், சில பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி தீர்த்தம் என்னும் தெப்ப குளத்தில் இறங்கி, கை, கால்களை கழுவி சென்றனர்.
ஆழமான தெப்பகுளத்தின் படிகளில் பாசி படர்ந்துள்ளதால், குளத்தில் இறங்கும் சிறுவர்கள் மட்டுமின்றி பக்தர்களும் கால் வழுக்கி குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் உள்ளது.
எனவே, ஆழமான குளத்தில் பக்தர்கள் இறங்க கோவில் நிர்வாகம் தடை விதித்து தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.