''அமைச்சரையே அதிகாரிகள், 'ஓவர்டேக்' பண்றா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ஒரு மடக்கு குடித்தார் குப்பண்ணா.
''எந்த துறை அதிகாரி பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் தலைவரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி இருக்கார்... துணை தலைவரா, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருக்கணும் ஓய்...
''ஆனா, வீட்டு வசதித் துறை செயலர் ஹதேஷ் குமார் மக்வானா, அந்த இடத்துல வேற யாரையும் நியமிக்காம, தானே கூடுதல் பொறுப்பை ஏத்துண்டுட்டார்...
''ஆரம்பத்துல இருந்தே இவருக்கும், அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம்... இதனால, சி.எம்.டி.ஏ., சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கறதுல, ஹதேஷ் குமாரும், மெம்பர் செகரட்டரியும் தனி ஆவர்த்தனம் வாசிக்கறா ஓய்...
''சமீபத்துல நடந்த கூட்டத்துல கூட, அமைச்சரின் கருத்துக்கு மாறான முடிவுகளையே இவா எடுத்திருக்கா... இது, பலரையும் முகம் சுளிக்க வச்சுடுத்து... 'முதல்வர் தலையிட்டு பஞ்சாயத்து செஞ்சா தான் நிலைமை சரியாகும்'னு மத்த அதிகாரிகள் நினைக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அமைச்சர் ஆகிறதுக்கு முன்னாடியே, அவர் கீழ பணியாற்ற அதிகாரிகள் மத்தியில போட்டி நடக்கு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''யாரு... உதயநிதியையா சொல்றேள்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஆமாம்... கட்சியில பல மூத்த தலைவர்கள் இருக்கையில, உதயநிதிக்கு அமைச்சர் பதவி குடுக்க முதல்வர் தயங்குதாரு வே... ஆனா, பல தரப்புல இருந்தும் நெருக்கடி வருதுல்லா... அதனால, சீக்கிரமே அமைச்சர், 'சீட்'டுல உதயநிதி உட்கார்ந்துடுவாருன்னு சொல்லுதாவ வே...
''அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும்னு, கோட்டையில இப்பவே பட்டிமன்றம் நடக்கு... அதுக்குள்ள உதயநிதியின் கீழ் செயலரா பணியாற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான், நீன்னு போட்டி போடுதாவ வே... 'முதல்வர் மகனுடன் நெருக்கமானா, அதிகாரத்துடன் வலம் வரலாம்'கிற நினைப்பு தான் இதுக்கு காரணம்...'' என்றார், அண்ணாச்சி.
''நானும் உதயநிதி சம்பந்தமா ஒரு சங்கதி சொல்றேங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''உதயநிதிக்கு சமீபத்துல பிறந்த நாள் வந்துச்சே... இதுக்காக, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை, கடைத் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள்ல தி.மு.க.,காரங்க வாழ்த்து போஸ்டர் ஒட்டினாங்க...
''அரசு பள்ளி மாணவர்களை வச்சு, இந்த போஸ்டர் ஒட்டுற வேலைய செஞ்சிருக்காங்க... இதை பார்த்த பொதுமக்களுக்கு பயங்கர அதிர்ச்சி... 'பள்ளி மாணவர்களை போஸ்டர் ஒட்ட பயன்படுத்திய, தி.மு.க., நிர்வாகிகள் மீது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்துல நடவடிக்கை எடுக்கணும்'னு சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி துாக்கிட்டாங்க...
''அது மட்டும் இல்லைங்க... அன்னைக்கு நடந்த பிறந்த நாள் பொதுக் கூட்டத்துல, பள்ளி மாணவ - மாணவியரை மேடை ஏத்தி, உதயநிதியை புகழ்ந்து பாட்டு பாட வச்சிருக்காங்க... 'உதயநிதியின் நண்பரான கல்வி அமைச்சர் மகேஷ், அரசு பள்ளியை உதயநிதி ரசிகர் மன்றமா மாத்துறாரா'ன்னு சமூக வலைதளங்கள்ல பலரும் கொந்தளிச்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அண்ணாச்சி சிரிக்க, பெஞ்ச் கலைந்தது.