டிசம்பர் 2, 2008
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், குருசாமி ராஜா - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1933 ஜூலை 26ல் பிறந்தவர் ஜகந்நாத ராஜா. தெலுங்கரான இவர், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி மற்றும் துளு ஆகிய மொழிகளை அறிந்தவர்.
கபிலரின், 'குறிஞ்சிப்பாட்டு' இவரால் தெலுங்கு மொழிக்கு மாறியது. தொடர்ந்து 'திருக்குறள்', பாரதியின், 'காலமும் கருத்தும்' உள்ளிட்ட நுாலையும் தெலுங்காக்கம் செய்தார். முத்தொள்ளாயிரத்தை கன்னடம், மலையாளத்தில் மொழிபெயர்த்தார். பாலி மொழியில் இருந்த புத்தரின் போதனைகளை, 'தீக நிகாயம்' என்ற பெயரில் தமிழில் வெளியிட்டார்.
பல மொழிகளிலும் நுால்களை இயற்றிய இவர், தன் வீட்டில், ௧௦ ஆயிரம் நுால்கள் கொண்ட நுாலகத்தை அமைத்தார். இவரின், 'சூடிக்கொடுத்தவள்' நுாலுக்கு, சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான முதல் பரிசு கிடைத்தது. இவர், 2008ல், இதே நாளில் தன் 75வது வயதில் மறைந்தார்.
குன்றக்குடி அடிகளார் வியந்து பட்டமளித்த, 'பன்மொழிப் புலவர்' நினைவு தினம் இன்று!