புதுடில்லி, நம் நாட்டுக்குள் அத்துமீறி நுழையும் 'ட்ரோன்'களை வேட்டையாட, நம் ராணுவம் கழுகுகளை புதிய ஆயுதமாக பயன்படுத்த உள்ளது. இதற்காக, கழுகுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய, அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி உத்தரகண்ட் மாநிலம் அவ்லியில் நடந்து வருகிறது.
இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை வானிலேயே தாக்கி அழிக்க கழுகுகள் பயன்படுத்தப்பட்டன. இது, அமெரிக்க வீரர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
![]()
|
இது குறித்து நம் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் ட்ரோன் வாயிலாக கடத்தி வரப்படுகின்றன.
இதையடுத்து, இந்த ட்ரோன்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்க கழுகுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள படைப் பிரிவில், கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு, எதிரி நாட்டு ட்ரோன்களை சரியாக அடையாளம் கண்டு, அதை வீழ்த்தும் பயிற்சி கழுகுகளுக்கு அளிக்கப்படுகிறது.
இதற்காக குறிப்பிட்ட சில கழுகுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இவற்றுக்கு ட்ரோன்களால் ஆபத்து ஏற்டாது.
தற்போதைய நிலையில், வெறும் கண்காணிப்பு பணிக்காக மட்டும் கழுகுகளை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக கழுகுகளின்அலகில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இன்னும் படையில் சேர்க்கப்பட வில்லை. ஆனால், எதிர்காலத்தில் ட்ரோன்களை அழிக்கும் ஆயுதமாக கழுகுகள் நம் படைகளில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், ட்ரோன்களை அழிக்கும் கழுகுப் படைப் பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.