ஸ்ரீபெரும்புதுார்:உமையாள் பரணஞ்சேரியில் உள்ள சமூக வன காடு பகுதியில் பனை மரம் வளர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
குன்றத்துார் ஒன்றியம் வலையகரணை ஊராட்சி, உமையாள் பரணஞ்சேரி பகுதியில் சமூக வன காடு உள்ளது.
இப்பகுதியில் உள்ள காலி இடங்களில், ஸ்ரீபெரும்புதுார் சமூக வன சாரகம் சார்பில், வலைய கரணை ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் இணைந்து, நாவல், நீர்மத்தி, புங்கன் ஆகிய வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்து 400 மரக்கன்றுகளை 2016ம் ஆண்டு நடவு செய்தனர்.
மரங்களுக்கு தண்ணீர் விட ஏழு லட்சம் மதிப்பில் ஆழ் துளை கிணறும் அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த இடத்தில் மண் தன்மை சரியில்லாததால் நடப்பட்ட மரங்கள் வளராமல் அனைத்தும் காய்ந்தன. பனை மரங்கள் வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை உடையது எனவே, தற்போது காலியாக உள்ள இந்த நிலத்தில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.