மீஞ்சூர்:மீஞ்சூர் - வண்டலுார் சாலை சந்திப்பில் இருந்து, வல்லுார் - எண்ணுார் துறைமுகம் சாலை சந்திப்பு வரை, சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. அதில் தற்காலிக சீரமைப்பிற்காக, செங்கற்கள் மற்றும் சரளை கற்களை போட்டு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பேற்றி உள்ளது.
வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதால், செங்கற்களும், சரளை கற்களும் துாளாகி, புழுதியாக சாலை முழுதும் பறக்கிறது.
இதனால், சாலை ஓரங்களில் உள்ள வியாபாரிகள், போக்குவரத்து காவலர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையில் இருந்து பறக்கும் புழுதியால், பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது.
சாலையில் பள்ளங்கள், அதிலிருந்து வரும் புழுதி ஆகியவற்றால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து, கீழே விழுந்து சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
மேற்கண்ட சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும், நடவடிக்கை இன்றி உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தினமும் புழுதியில் சிக்கி தவிக்கின்றனர்.
துரித நடவடிக்கையாக, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement