புதுடில்லி, அனைத்து மகளிர் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குகளை விசாரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும் நிலையில் தற்போது 27 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இதில் மூவர் பெண்கள்.
இந்நிலையில், அனைத்து மகளிர் நீதிபதிகள் அடங்கிய அமர்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று அமைத்தார். இதில், நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் பீலா எம்.திரிவேதி ஆகியோர் இடம்பெற்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற எண் 11ல் இவர்கள் நேற்று விசாரணை நடத்தினர்.
![]()
|
திருமண உறவில் ஏற்பட்ட தகராறுகள் தொடர்பான 10 மனுக்கள் மற்றும் 10 ஜாமின் மனுக்கள் உட்பட 32 வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நேற்று பட்டியலிடப்பட்டன.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இரண்டு மகளிர் அமர்வுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. 2013ல் அமைக்கப்பட்ட முதலாவது மகளிர் அமர்வில், நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இடம்பெற்றனர்.
இரண்டாவது மகளிர் அமர்வு 2018ல் அமைக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி இடம் பெற்றனர். தற்போது அமைக்கப்பட்டுள்ளது மூன்றாவது மகளிர் அமர்வு என்ற பெருமையை பெற்றுள்ளது.