பா.ஜ., பற்றிய பயத்தை விதைத்து, அ.தி.மு.க., ஓட்டுகளை இழுக்கும் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே, முன்னாள் முதல்வர் ஜானகி நுாற்றாண்டு துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் நுாற்றாண்டு துவக்க விழா, சென்னை, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அளவு கடந்த பாசம்
விழாவில் பேசிய ஸ்டாலின், எம்.ஜி.ஆருக்கும், தி.மு.க., மற்றும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பேசினார். அத்துடன் நிற்காமல், 'எம்.ஜி.ஆர்., என் மீது அளவு கடந்த பாசத்தையும், அன்பையும் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர்., படங்களை முதல் நாளே பார்த்து விடுவேன்.
அதனால், என்னை தொலைபேசியில் அழைத்து படம் எப்படி இருந்தது என கேட்பார். பெரியப்பா என்ற முறையில் எனக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார்' என, தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள நெருக்கம் பற்றி விரிவாக ஸ்டாலின் பேசினார்.
ஸ்டாலின் பேச்சு, அரசியலில் அனைவரையும் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் 13 முறை வெற்றி; 49 ஆண்டுகள் தி.மு.க., தலைவர்; 19 ஆண்டுகள் முதல்வர் என, அரை நுாற்றாண்டு காலம், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர்,
கருணாநிதி.ஆனால், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த 10 ஆண்டுகளில், கருணாநிதியின் அரசியல் தமிழகத்தில் எடுபடவே இல்லை. அரை நுாற்றாண்டு அரசியல் வாழ்க்கையில், கருணாநிதியால் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியமைக்க முடியவில்லை. இதற்கு காரணம் எம்.ஜி.ஆரும், அவர் துவங்கிய அ.தி.மு.க.,வும் தான்.
அச்சம்
இப்படி தி.மு.க.,வுக்கு பெரும் வீழ்ச்சியை கொடுத்த எம்.ஜி.ஆரை, ஸ்டாலின் ஏன் இந்த அளவுக்கு புகழ வேண்டும்?தி.மு.க., எதிர்ப்பில் உருவானது தான் அ.தி.மு.க., என்ற கட்சி. ஜெயலலிதா மறைவுக்கு பின், மூன்றாக பிரிந்து கிடக்கிறது.
அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை குறிவைத்து, பா.ஜ., வேலை செய்து வருகிறது. அ.தி.மு.க.,வின் இடத்தை, தன் சித்தாந்த எதிரியான பா.ஜ., பிடித்து விடுமோ என்ற அச்சம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டு
உள்ளது.அதனால் தான், 'தமிழகத்தில் பிசாசு போல பா.ஜ., வளர்ந்து வருகிறது. அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கி விடும். பா.ஜ., நம் பொது எதிரி. அதி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை' என்றெல்லாம் துரைமுருகன், கே.என்.நேரு போன்ற மூத்த அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.
5 சதவீத ஓட்டு
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலினும், 'எம்.ஜி.ஆர்., என் பெரியப்பா' என்றெல்லாம் பேசியுள்ளார்.அ.தி.மு.க.,வுக்குள் பா.ஜ., பற்றிய பயத்தை விதைத்து, குறைந்தது 5 சதவீத ஓட்டுகளை இழுத்துவிட்டால், 2024-ல் எளிதாக வென்று விடலாம் என, முதல்வர் ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார்.அதன் வெளிப்பாடு தான், ஜானகி விழாவில் அவரது பேச்சு என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.