திருப்பூர்-ஒசைரி நுால் விலை உயராததால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சீசனில், பஞ்சு விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, கேண்டி(356 கிலோ), 1.05 லட்சம் ரூபாயாக உச்சம் தொட்டது. இதன் எதிராலியாக தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை அபரிமிதமாக உயர்த்தியதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை பெரும் பாதிப்பை சந்தித்தது.
புதிய பருத்தி சீசன், கடந்த அக்டோபரில் துவங்கியது. இதையடுத்து, பஞ்சு விலை, படிப்படியாக குறையத்துவங்கியது. கடந்த நவம்பரில், ஒரு கேண்டி பருத்தி கொள்முதல் விலை, 64 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
உள்நாட்டில் நுால் தேவை குறைவு காரணமாக, தமிழக நுாற்பாலைகள் ஒசைரி நுால் விலையையும் குறைத்துவருகின்றன. கடந்த நவ., 1ம் தேதி, ஒசைரி நுால் விலையில் கிலோவுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பஞ்சு விலை உயரத்தை நோக்கிய பயணத்தை துவக்கியுள்ளது. ஒரு கேண்டி பஞ்சு விலை, 71 ஆயிரம் ரூபாயை எட்டியது. இம்மாதம் நுால் விலை என்னாகுமோ என திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலை அடைந்தனர்.
நவ., மாத நுால் விலையே, மாற்றமின்றி இம்மாதம் தொடரும் என, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன; இதனால், பின்னலாடை துறையினர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.