'ஆரிய போர்' நாடகத்தில், ஸ்டாலின் நடித்த காரணத்தால் தான், இன்று அவரால் 'திராவிட மாடல்' ஆட்சி வழங்க முடிகிறது' என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.
தி.மு.க.,வில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பின், கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில், நேற்று மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது.
அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் நேரு, துணை பொதுச்செயலர்கள் பொன்முடி, கனிமொழி முன்னிலை வகித்தனர்.
![]()
|
மறைந்த, அமைச்சர் அன்பழகனின் நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, தி.மு.க., சார்பில், வரும் ௧௫ல், 100 பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ௧௭ல், வடசென்னையில், கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மூத்த அமைச்சர் ஒருவர் பேசுகையில், 'தேர்தல் களத்தில் எதிரிகள் பலமில்லாமல் உள்ளனர் என, நினைத்து விடக் கூடாது. 'ஆரிய போர்' நாடகத்தில் அன்று, ஸ்டாலின் நடித்த காரணத்தால் தான், இன்று அவரால் திராவிட மாடல் ஆட்சி வழங்க முடிகிறது' என்றார்.
![]()
|
மற்றொரு மூத்த அமைச்சர் பேசுகையில், 'சில மாவட்டங்களில், கட்சியினரிடம் குழு மனப்பான்மை உள்ளது. அதை ஒருவருக்கொருவர் பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே, முதல்வர் ஸ்டாலினுக்கு பாதி சுமை குறையும்' என்றார்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக, தி.மு.க.,வினர் கூறியதாவது: 'பூத் கமிட்டி' உறுப்பினர்கள் நியமன பணிகளை மிகவும் கவனமாக முடிக்க வேண்டும். மாவட்ட அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்.
![]()
|
அணிகளுக்கு, தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக் கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும். இந்த பணிகளை செய்து முடிப்பதன் வாயிலாக, கூடுதலாக 15 லட்சம் நிர்வாகிகள் இடம்பெறுவர்.
மாவட்ட அளவில் உள்ள அணி நிர்வாகிகளுக்கு, மாவட்ட செயலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
கடந்த லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உட்பட 40ல், ஒரு தொகுதியை மட்டும் இழந்து விட்டோம். அப்போது, நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம்; தற்போது ஆளும் கட்சியாக இருக்கிறோம். அதனால் வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -