'மன உளைச்சல் ஏற்படுத்தும் டி.எஸ்.பி., மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆயுதப்படை போலீசார், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
திருப்பத்துார் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள், முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்: திருப்பத்துார் ஆயுதப்படைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி., விநாயகம், காவலர்களுக்கு போதிய அளவில் விடுப்பு தர மறுக்கிறார். திருமணத்துக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள் கேட்டால், 7 நாள் மட்டுமே அனுமதிக்கிறார்.
மருத்துவ சிகிச்சை எடுக்க 30 நாள் கேட்டால் 2 நாள் தற்செயல் விடுப்பு கொடுத்து பாதுகாப்பு பணிக்கு அனுப்புகிறார். வாராந்திர ஓய்வும் தருவதில்லை. ஓய்வு கேட்டு மனு அளித்தால் முகத்தில் துாக்கி வீசுகிறார். 'எங்கள் விடுப்பை தர வேண்டும்' என்று கேட்கும் காவலர்களுக்கு, 'மெமோ கொடுப்பேன்' என்றும், 'பதவி உயர்வை நிறுத்தி வைத்து விடுவேன்' என்றும் மிரட்டல் விடுக்கிறார்.
அவரது ஜாதி காவலர்களுக்கு மட்டும் கேட்கும் விடுப்பை அப்படியே வழங்கி விடுகிறார். ஆயுதப்படையில் கழிவறை வசதி எதுவும் இல்லை. எனினும் பணி முடிந்து மாலை வரும் காவலர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே கட்டாயப்படுத்தி தங்க வைக்கிறார்.
இதனால் திருமணம் ஆன ஆயுதப்படை காவலர்கள் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர். சிலரிடம் தற்கொலை எண்ணமும் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க டி.எஸ்.பி., விநாயகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை டி.ஜி.பி., வடக்கு மண்டல ஐ.ஜி., வேலுார் டி.ஐ.ஜி., மற்றும் திருப்பத்துார் எஸ்.பி., ஆகியோருக்கும் ஆயுதப்படை காவலர்கள் அனுப்பியுள்ளனர்.
-நமது நிருபர்-