இந்திய நிகழ்வுகள்
ரூ.2 கோடி இன்ஷூரன்ஸ் தொகை பெறுவதற்காக விபத்து நாடகம்
ஜெய்ப்பூர்-ராஜஸ்தானில், 2 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை வைத்து காரை மோதி கொலை செய்து, விபத்து என கூறி நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி சாலு தேவி, 32. கடந்த நவ., 5ம் தேதி, ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் தன் உறவினருடன் சென்ற சாலு தேவி மீது, சொகுசு கார் மோதியது. இதில் சாலு தேவியும், அவரது உறவினரும் இறந்தனர்.
புகார்
இதை விபத்து என போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சாலு தேவியின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மகேஷ் சந்தின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் விசாரித்தனர். சமீபத்தில் அவர் மனைவி பெயரில் போட்டிருந்த இன்ஷூரன்ஸ்தொகை, 2 கோடி ரூபாயை பெற்றது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்ததில், மகேஷ் சந்த் மீது, அவரது மனைவி சாலு தேவி ஏற்கனவே வரதட்சணை புகார் கொடுத்திருப்பதும் தெரிந்தது.
மகேஷிடம் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணை யில், இன்ஷூரன்ஸ் தொகைக்காக கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
மகேஷுக்கும், சாலுவுக்கும் 2015ல் திருமணம்ஆனது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு, மனைவியை மகேஷ் துன்புறுத்தியுள்ளார். இது குறித்து சாலு தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சாலு, தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே, ஒரு ஆண்டுக்கு முன் தன் மனைவி பெயரில் மகேஷ், 2 கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் போட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சாலுவை தொடர்பு கொண்ட மகேஷ், 'நம் குடும்பத்துக்காக ஆஞ்சநேயர் கோவிலில் நேர்ந்துள்ளேன்.
'தொடர்ந்து, 11 மாதங்களுக்கு கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் நீ சென்று வழிபட வேண்டும். நேர்த்திக் கடன் முடிந்ததும் நீ வீட்டுக்கு வந்து விடலாம். நாம் சேர்ந்து வாழலாம்' என கூறியுள்ளார்.
இதை நம்பிய சாலு, கடந்த சில மாதங்களாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளார். நவ., 5ல், தன் உறவினர் ஒருவருடன் சாலு, ஆஞ்சநேயர் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
விசாரணை
அப்போது மகேஷ் ஏற்பாடு செய்த கூலிப்படையினர், சொகுசு காரில் சென்று சாலு மீது மோதி விபத்து ஏற்படுத்தி நாடகமாடி உள்ளனர். இதற்காக கூலிப்படையினருக்கு, 5 லட்சம் ரூபாய் முன் பணமாக மகேஷ் கொடுத்துள்ளார்.
விசாரணையில் குற்றங்களை ஒப்புக் கொண்டதை அடுத்து, மகேஷையும், அவர் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையினரையும் கைது செய்தோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
தென் கொரிய பெண்ணை சீண்டிய இரு இளைஞர்கள் மும்பையில் கைது
மும்பை-தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை, சாலையில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டிய இரு இளைஞர்களை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'யுடியூப்' சமூக ஊடகத்தில், 'வீடியோ'க்கள் பதிவிட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்தார்.
அதிர்ச்சி
இங்கு கர் மேற்கு என்ற இடத்தில் சாலையில் நின்றபடி, யுடியூபில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். இதை 1,000க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்தபடியே அவரது கையை பிடித்து இழுத்தார்.
அதிர்ச்சி அடைந்த பெண் சற்று விலகியதும் அருகே வந்து முத்தமிட முயன்றார். 'நோ நோ' என கூறியபடி அந்த பெண் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.
வழக்குப் பதிவு
தன்னிடம் இருவர் தவறாக நடக்க முயன்றது குறித்து நேரலையில் விவரித்தபடியே அந்த பெண் நடக்கத் துவங்கினார்.
அப்போது மற்றொரு நபருடன் பின்னால் பைக்கில் பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர், 'வீட்டில் இறக்கிவிடவா' என, அந்த பெண்ணிடம் கேட்க, 'வீடு பக்கத்தில் தான் இருக்கிறது' என, அந்த பெண் பதில் சொல்லிவிட்டு சென்றார்.
இவை அனைத்தும் நேரலையில் பதிவாகின. இந்த சம்பவம் குறித்து சமூகவலைதளத்தில் பலர் எதிர்வினையாற்றினர். தென் கொரிய பெண்ணும் அந்தக் காட்சிகளை பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, கர் மேற்கு போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மொபீன் சந்த் முகமது ஷேக், 19, மற்றும் முகமது நகிப் சதாரியாலம் அன்சாரி, 20, ஆகியோரை கைது செய்தனர்.
குடும்ப செலவு தகராறில் கொலை காதலியை கொன்றவர் தகவல்
புதுடில்லி-குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம்மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர் இருவரும்காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.
இதற்கிடையே, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது சமீபத்தில் தெரியவந்தது.
மஹா.,வில் 'ராகிங்' கொடுமை பயிற்சி டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'
நாக்பூர்-மஹாராஷ்டிரா அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவரை 'ராகிங்' செய்த ஆறு சீனியர் மாணவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி குழு - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் ஆறு பேர் ராகிங் செய்துள்ளனர். இதை பாதிக்கப்பட்ட மாணவர் ரகசியமாக மொபைல் போனில் 'வீடியோ' எடுத்துள்ளார்.
அவர், இந்த வீடியோவை கல்லுாரியின் ராகிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, இதில் தொடர்புடைய ஆறு பயிற்சி டாக்டர்களை, கல்லூரி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
மேலும் கல்லுாரியின் ராகிங் தடுப்பு கமிட்டி சார்பில், ஆறு பேர் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள அப்தாப், விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதன்படி அவருக்கு சமீபத்தில், 'பாலிகிராப்' பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'நார்கோ அனாலசிஸ்' எனப்படும் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின்போது, குடும்ப செலவு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வந்த ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அப்தாப் கூறியதாக தெரிகிறது.
போலீசில் சிக்காமல் இருக்க, ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக்கி பல இடங்களில் வீசியதாகவும், அவருடைய பொருட்களை பல இடங்களில் வீசியதாகவும் அப்தாப் கூறியுள்ளார்.
இந்த பரிசோதனைகளில் அப்தாப் தெரிவிக்கும் தகவல்கள் சட்டப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதே நேரத்தில் இந்த தகவல்களின் அடிப்படையில், போலீசார் மேல் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்க முடியும்.
இதற்கிடையே, பல்வேறு இடங்களில் கிடைத்த ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள், மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இதன்பிறகே, இந்த வழக்கின் விசாரணை தீவிரமடையும் என போலீசார் தெரிவித்தனர்.
தமிழக நிகழ்வுகள்
ரூ.11 லட்சம் மதிப்பு ரேஷன் பொருட்கள் பறிமுதல்
சென்னை-கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்களை, உணவு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, உணவு துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:
நவ., 21 முதல் 27ம் தேதி வரை, கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.80 லட்சம் கிலோ அரிசி, 87 லிட்டர் மண்ணெண்ணெய், 3,520 கிலோ துவரம் பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 72 சமையல் காஸ் சிலிண்டரும், கடத்தலுக்கு பயன்படுத்திய, 47 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது
கோவை-கனடாவில் வேலை வாங்கித் தருவதாக, ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு கைதான நபரை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடுபுதூர் முருகன் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 29. அதே பகுதியில் 'சக்தி பிளேஸ்மென்ட் சர்வீஸ்' என்ற பெயரில், வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தினார். கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், விசா, விமான செலவுக்கு சில லட்சம் ரூபாய்கள் செலவாகும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்.
கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 88 பேர் ஒரு கோடி ரூபாய் பணம் செலுத்தினர். ஆனால், யாருக்கும் கனடாவில் வேலை வாங்கித் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், தமிழ்செல்வனை கடந்த மாதம் 17ம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் கஸ்டடி விசாரணைக்கு, அனுமதி வழங்கப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்
தந்தை அடித்துக் கொலை: 'பாசக்கார' மகன் கைது
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம், 65; இவரது மகன்கள் யாசிம் பாஷா, 38; பாரூக் பாஷா, 36; பெயின்டர்கள்.

இதில், யாசிம் பாஷாவுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் குடிபோதையில் சென்ற பாரூக் பாஷா, தந்தையிடம், தனக்கு திருமணம் செய்து வைத்து, சொத்தைப் பிரித்துத் தருமாறு தகராறு செய்துள்ளார்.
இதற்கு மறுத்த தந்தை இப்ராஹிமை தடியால் சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த இப்ராஹிம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேல்சிகிச்சைக்காக நேற்று அதிகாலை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இப்ராஹிம் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தந்தையை அடித்துக் கொலை செய்த பாரூக் பாஷாவை கைது செய்தனர்.
போக்சோ வழக்கில் வாலிபர் கைது
திட்டக்குடி : ராமநத்தம் அருகே 15வயது சிறுமியை திருமணம் செய்து தர வலியுறுத்தி, சிறுமியின் தாயை தாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிச்சான் மகன் செந்தில்,27. இவருக்கும், கணவரைப்பிரிந்து வாழும் 33 வயது பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஆறு வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்பெண்ணின் 15 வயது மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு, செந்தில் கடந்த சில மாதங்களாக அப்பெண்ணிடம் வற்புறுத்தி வந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண், செந்திலின் தொந்தரவு தாங்க முடியாமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு, வேறு ஒரு பகுதிக்கு சென்று வாடகை வீட்டில் தங்கினார்.
இதையறிந்த செந்தில், கடந்த 29ம் தேதி நேரில் சென்று அப்பெண்ணை தாக்கி, சிறுமியை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்தனர்.
முன்விரோதத்தால் கத்திக்குத்து
பெ.நா.பாளையம்--முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தியவரை போலீஸ் தேடி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம், இடிகரை, சென்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 30; கார் டிரைவர். இவரது நண்பர் மனோஜ் குமார், 32. இங்குள்ள தனியார் உணவு விடுதியில் முன்விரோதம் காரணமாக மனோஜ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணன் தலையில் குத்தினார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணன், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தப்பி ஓடிய மனோஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.