புதுச்சேரி: புதுச்சேரியில் போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதில் காங்., - தி.மு.க., கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், 1964, 1985, 1991, 2001, 2006, 2016 என ஆறு முறை காங்., ஆட்சி புரிந்தது. கடந்த 15-வது சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்து என்.ஆர் காங்.,-பா.ஜ.,கூட்டணியிடம் ஆட்சியை பறி கொடுத்தது.
காங்., கட்சிக்கு தற்போது 2 எம்.எல்.ஏ., க்கள் மட்டுமே உள்ளதால், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தையும், கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம் பறிகொடுத்தது. தி.மு.க.,மாநில அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், புதுச்சேரியில் காங்., - தி.மு.க., இடையே தலைமை தாங்குவதில் உரசல் ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரியில் நேற்று நடந்த காங்., மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் முன் வைத்த கருத்துகள்:
முன்னாள் அரசு கொறடா அனந்தராமன்: புதுச்சேரியில் காங்., கட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். எனவே, நாம் தி.மு.க., பின்னால் போக வேண்டிய அவசியம் இல்லை. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து கொள்ளலாம்.
ஆனால் போராட்டங்களில் காங்., தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும். இல்லையென்றால் தனித்து போராட்டம் நடத்தலாம். புதுச்சேரியில் காங்., கட்சிக்கு 1.5 லட்சம் ஓட்டு வங்கி உள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது. இனி காங்., கட்சி புதுச்சேரியில் அரசியலையும், போராட்டங்களையும் தனித்து சந்திக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் ஷாஜகான்: புதுச்சேரியில் காங்., 29 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. ஆனால் தி.மு.க., 12 சதவீத ஓட்டு வங்கி தான் வைத்துள்ளது. ஆனால் அவர்கள் தலைமையின் கீழ் நாம் போராட்டம் நடத்துகின்ற நிலை இன்றுள்ளது. மூன்றாவது கட்சி மாதிரி நாம் போராட்டத்திற்கு செல்கிறோம். இது நமக்கு மிகப்பெரிய இழுக்கு.
மாநிலத்தில் தி.மு.க., வந்தாலும் வராவிட்டாலும் தனியாக போராட்டம் நடத்துவோம். புதுச்சேரியில் அடுத்த முறை காங்., கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். இங்கு நமது முதுகில் தான் அவர்கள் ஏற முடியும். தமிழகத்தில் அவர்கள் முதுகில் ஏறி நாம் ஜெயிக்கலாம். புதுச்சேரியின் நிலைமை வேறு.
மாநில செயலாளர் ரகுபதி: சட்டசபை தேர்தலில் காங்., கூட்டணியில் இருந்துதான் தி.மு.க., 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தற்போது தி.மு.க.,வினர் காங்., கட்சியை அலட்சியப்படுத்துவது போல் நடந்துக் கொள்வது சரியல்ல.

புதுச்சேரியை பொறுத்தவரையில் பா.ஜ.,வை விட காங்., கட்சிக்கு தி.மு.க.,வே எதிரிபோல் செயல்பட்டு வருகிறது. ஆகவே, காங்., கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்கள் செயல்படுவது அவசியம். மக்கள் பிரச்னைக்காக போராட வேண்டும்.
நாம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். தி.மு.க.,வைத் துாக்கிப்பிடிப்பதை விட்டுவிட்டு நம் கட்சியை நாம் வளர்க்க வேண்டும். இறுதியாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. இதில் மாற்றுக்கருத்து இல்லை.
சமீப காலமாக மதசார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்களில் தி.மு.க.,வினர்தான் தலைமை என்று செய்தி வெளியாகிறது. மதசார்பற்ற கூட்டணி நிகழ்ச்சி என்றால் காங்., கட்சிதான் தலைமை தாங்க வேண்டும். இல்லை யெனில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. இதில் நிர்வாகிகள் உறுதியாக இருக்க வேண்டும்.
மாதந்தோறும் புதுச்சேரியில் நிலவும் பிரச்னை களை முன்வைத்து போராட்டம் நடத்த வேண்டும். இதற்காக காங்., கட்சியில் குழு அமைக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்காவிட்டால் நாம் தனித்து போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்.
'எம்.பி., சீட் எங்களுக்கு தான்'
முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் பேசுகையில், புதுச்சேரி எம்.பி., சீட் காங்., கட்சியின் சிட்டிங் தொகுதி. இந்த தொகுதியில் காங்., வேட்பாளர் தான் தொடர்ந்து போட்டியிடுவார். அதற்கு எங்களது கூட்டணி கட்சிகள் உறுதுணையாக இருக்கும்.காங்., கட்சி.,க்கு தற்போது 2 எம்.எல்.ஏக்கள், மட்டுமே உள்ளனர். தி.மு.க.,விற்கு 6 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதனால் எம்.பி., சீட்டு தி.மு.க.,விற்கு என்று சொல்ல முடியாது.
இந்த 8 எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மதசார்பற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தான்.தி.மு.க., - காங்., தனித்தனியே ஜெயிக்கவில்லை. எனவே யாரும் எங்களுடைய சீட் என்று கேட்கமாட்டார்கள். யாருக்கு சீட் என்பதை தலைமை முடிவு செய்யும்.புதுச்சேரியை பொருத்தவரை எம்.பி., தேர்தலில் காங்., கட்சி வேட்பாளர் தான் போட்டி யிடுவார். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. தி.மு.க., - காங்., இடையே சுமூக உறவு உள்ளது என பேசினார்.