முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
கோவை மாவட்டம், சிறுமுகை அருகே, 4,000 ஏக்கரில், பவானி சாகர் அணை அருகில், 1,084 ஏக்கரில், இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்க, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இது விவசாயிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் நடவடிக்கையில் இருந்து, தமிழகத்தில் விவசாய விரோத மாடல் ஆட்சி நடப்பது தெளிவாகிறது. தி.மு.க., அரசின் நடவடிக்கையை, அ.தி.மு.க., சார்பில் கண்டிக்கிறேன்.
முன்னேற்றம் எனும் போது சில சங்கடங்களும் இருக்கத் தான் செய்யும்... ஆளுங்கட்சியாக இருக்கும் போது திட்டங்கள் போடுவதும், எதிர்க்கட்சியாக மாறியதும், அதை தடுக்க நினைப்பதும், நல்ல அரசியலா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் உத்தரவிட்டும், சென்னையை அடுத்த, இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், 12 ஆண்டுகளுக்கு முன் பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை, இந்த விஷயத்தில் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டு வதும் கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தங்கள் துறையின் பெயரை நினைவில் வைத்து கொண்டுள்ளனரா என்பதே தெரியவில்லை!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் வைத்தீஸ்வரன் அறிக்கை:
சென்னை -- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், 2018 முதல் கடந்த ஜூன் வரையிலான நான்கு ஆண்டு கால விபத்துகளில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சாலை விபத்துக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும் காரணம். தாம்பரம் -- உளுந்துார்பேட்டை சாலை கொலைக் களமாகவே மாறி உள்ளது.
சுங்க கட்டணம் வசூலிக்கிறதுல காட்டுற அக்கறையில கால்வாசி கூட, சாலைகளை பராமரிப்பதில் காட்ட மாட்டேங்கிறாங்களே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தி.மு.க., ஆட்சி பலவீனப்பட்டு உள்ளது. தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள், ஓரணியில் திரள வேண்டும்; அது நடக்கும் என்று நினைக்கிறேன். இந்த முறை, தி.மு.க.,வை வீழ்த்த முடியும் என நினைக்கிறேன். நயவஞ்சக கூட்டத்தோடு என்றும் நாங்கள் இணைய மாட்டோம்.

தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற அழைப்புக்கு பின்னால், 'எங்களையும் அதில் சேர்த்துக்குங்க' என, கெஞ்சும் தொனி தெரிகிறதே!
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அலுவலக ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்குவது போல், பகுதி நேர ஆசிரியர்களுக்கும், சம்பள உயர்வு வழங்க, முதல்வர் ஆணையிட வேண்டும்.
பகுதிநேர பணியாளர்களுக்கும் பசி, தாகம், குடும்பம், குழந்தைகள் இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிஞ்சுக்கணும்!