வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் பால் விலை உயர்வு ,பழுதடைந்த சாலைகள் ஆகியவற்றை கண்டித்தும் அதிமுக சார்பில் கோவை சிவானந்தா காலனியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது:
எம்ஜிஆர், ஜெயலலிதாவில் மக்கள் நலனுக்காக உருவாக்கியது தான் அதிமுக. இந்த அதிமுகவை பற்றி பேச யோக்கியதை வேண்டும். அந்த யோக்கியதை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. 10 ஆண்டு காலத்தில் கோவைக்கு தேவைப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினோம், தடுப்பணை, ஏரிமராமத்து செய்தோம்.
இது எங்கள் சாதனை. 3வது குடிநீர்திட்டம் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கினோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலம் தேவையான நீரை வழங்கியது அதிமுக அரசு. 1800 கோடியில் பாலம் அமைத்தோம். மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தோம். கோவை விமான நிலைய விரிவாக்கப்பணியை துவக்கினோம். நாங்கள் உருவாக்கிய பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நாங்கள் துவக்கிய பணிகளை திமுகவினர் திறந்து வைக்கின்றனர். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைக்கின்றனர். எங்கள் மீது அவதூறு பரப்பி வழக்குகள் போடுவதை திமுக அரசு செய்து வருகிறது.மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
பால், மின்கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும். வரும் டிசம்பர் 9ம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், டிச. 12, ஊராட்சி பகுதிகளிலும் , 13 ம்தேதி நகராட்சி மாநகராட்சி பகுதிகளிலும் இந்த ஆர்பாட்டம் நடக்கும் இவ்வாறு பழனிசாமி கூறினார்.