வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: ம.பி.,யில் நடந்த திருமணம் ஒன்றில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பாடு சாப்பிட்ட எம்.பி.ஏ., பட்டதாரியை பிடித்த, உறவினர்கள் அவரை அடித்து உதைத்து பாத்திரம் கழுவ வைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை.
திருமண நிகழ்ச்சிகளில் மணமகன் மற்றும் மணமகள் தரப்பினரை தவிர்த்து அடையாளம் தெரியாத நபர்களும் உறவினர்கள் போல் நடித்து சாப்பிட்டு செல்வது வழக்கம். அதனை திருமண ஏற்பாட்டாளர்கள் கண்டுபிடித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலர் விசாரித்து விடுவதும், இன்னும் சிலர் எச்சரித்து விட்டு விடுவர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் போபாலில் விடுதியில் தங்கி எம்.பி.ஏ., படிக்கும் ஜபல்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழையா விருந்தாளியாக சென்று உணவு சாப்பிட்டுள்ளார்.
இதனை, கண்டுபிடித்த உறவினர்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து சராமரியாக தாக்கினர். பிறகு, அவருக்கு தண்டனையாக பாத்திரம் கழுவ வைத்துள்ளனர். எம்.பி.ஏ., படிக்கும் உனக்கு பெற்றோர் பணம் அனுப்ப மாட்டார்களா என கேள்வி எழுப்பி தாக்கினர். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவு செய்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த பலரும், இதனை மனிதநேயமற்ற செயல் எனக்கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.